இசையமைப்பாளர் தேவா இதுவரை தாம் பெற்றிராத கௌரவத்தை ஆஸ்திரேலியாவில் பெற்றுள்ளார்.
அண்மையில் இசை நிகழ்ச்சிக்காக அங்கு சென்ற தேவா, ஆஸ்திரேலியாவின் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு வருகைதர அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று வருகைபுரிந்த தேவாவை நாடாளுமன்றத்தில் அவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்து கௌரவப்படுத்தி உள்ளனர். மேலும், பெருமதிப்பு கொண்டு செங்கோல் ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த வரவேற்பையும் மரியாதையையும் எதிர்பார்க்காத தேவாவின் இசைக்குழுவினர், ஆர்ப்பரித்ததுடன் நாடாளுமன்றத்தில் வைத்து அவரைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் பேசிய தேவா, இந்தத் தருணம் தனக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பயணிக்கும் தெற்காசிய கலைஞர்களின் இசை மற்றும் கலாசாரத்திற்கும் உரியது என்றார்.
“கடந்த 36 ஆண்டுகளாக எனது இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது உண்மையான பலமாக இருந்து வந்துள்ளது. இந்த அங்கீகாரம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது,” என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

