மற்றவர்களின் திறமையை வளர்ப்பதே பெருமை: சசிகுமார்

மற்றவர்களின் திறமையை வளர்ப்பதே பெருமை: சசிகுமார்

2 mins read
9e57f027-6635-4498-b3ae-cd8622373455
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘மை லார்ட்’ படக்காட்சி. - படம்: த இந்து

தமிழ்த் திரைப்படத்தில் தரமான கதைகளையும் திறமையான கலைஞர்களையும் அடையாளம் காண்பதில் நடிகர் சசிகுமாருக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘மை லார்ட்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக அக்கறை கொண்ட கதைகளைத் தேர்வு செய்வதில் அவர் காட்டிவரும் தீவிரம் கோலிவுட்டில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்களை அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

புதுமுக இயக்குநர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிப்பது குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய சசிகுமார், “திறமை உள்ளவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதைக் கடவுள் எனக்குக் கொடுத்த வரமாகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.

“யாருக்கும் கிடைக்காத ஒரு விஷயம் எனக்கு கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி,” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது சசிகுமாரின் திரைப் பயணம் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படப் புகழ் இயக்குநர் ஆர்.டி.எம் இயக்கத்தில் ‘எவிடென்ஸ் #8’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஒரு குடும்பப் பின்னணியில் திகிலூட்டும் கதையாக உருவாகியுள்ள இதில் சசிகுமார் திருமணப் புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார். அவருக்குத் தந்தையாக கஸ்தூரி ராஜா நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.

அதேபோல், ‘வதந்தி’ இணையத் தொடரின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக சசிகுமார் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சசிகுமார்.
சசிகுமார். - படம்: விகடன்

அதன் முன்னோட்டக் காட்சிகள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

மறுபுறம், விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ பட இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் ‘நா நா’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

சரத்குமாருடன் இணைந்து சசிகுமார் நடித்துள்ள இப்படத்தில், ஓர் எளிய மனிதனைச் சமூகம் எப்படி மாற்றுகிறது என்பது உணர்வுபூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், அறிமுக இயக்குநர் பாலா அரண் இயக்கத்தில் ஒரு படத்திலும் ராஜுமுருகன் இயக்கத்தில் மீண்டும் சமூக அக்கறை கொண்ட ஒரு திரைப்படத்திலும் அவர் இணையவுள்ளார்.

குறிப்பாக, ‘நந்தன்’ பட இயக்குநர் இரா.சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நாவலின் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் மார்ட்டின் எனும் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கவும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

நடிகராக வரிசையாகப் பல படங்களைக் கைவசம் வைத்துள்ள சசிகுமார், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படத்தை இயக்கவும் திட்டமிட்டு, அதற்கான முதற்கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார்.
சசிகுமார். - படம்: விகடன்
குறிப்புச் சொற்கள்