தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் இயக்கத்திலும் நடிப்பிலும் அண்மையில் வெளியான படம் ‘ராயன்’.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ‘ராயன்’, இதுவரை ரூ.130 கோடிக்குமேல் வசூலித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாகவும் இப்படம் அமையும் எனச் சொல்லப்படுகின்றது.
அடுத்ததாக, தமிழிலும் தெலுங்கிலும் உருவாகும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா நடித்து வருகின்றார்.
குபேரா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தான் இயக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் தொடர்பான வேலைகளிலும் தனுஷ் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
இளம் நடிகர்களை வைத்து தனுஷ் இயக்கி வரும் அப்படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படப்பிடிப்பில் இணைய இருக்கின்றார் தனுஷ். அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘இளையராஜா பயோபிக்’ படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப் பல படங்களில் பரபரப்பாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால்பதித்தார் தனுஷ். தற்போது, அதே ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகும் ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தமிழ்த் திரையுலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

