“தன் வயதுக்கு எட்டவேண்டிய உயரத்தைவிட நடிகர் தனுஷ் இப்போது இருக்கும் இடம் மிகப்பெரியது. அவர் அடைந்துள்ள உயரமும் மிக அதிகமானது,” என்கிறார் இயக்குநர் சேகர் கமுல்லா.
இவரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘குபேரா’ விரைவில் திரைகாண உள்ளது.
தான் தெலுங்கு இயக்குநராக இருந்தாலும் ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்றும் அனைத்து மக்களும் கொண்டாடும் படமாக ‘குபேரா’ இருக்கும் என்றும் சொல்கிறார் சேகர் கமுல்லா.
இந்திய தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்தவர் இவர். ‘குபேரா’ அவரது இயக்கத்தில் உருவாகும் முதல் தமிழ் படம்.
“தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கிலும் தனுஷ் நடிப்பை இயக்குநர்கள் விரும்புகிறார்கள். அவரால் எத்தகைய கதாபாத்திரத்திலும் எளிதாக நடிக்க முடிகிறது. ‘கர்ணன்’ போன்ற கதாபாத்திரத்துக்கும் பொருந்துவார். ‘ராயன்’ வேடத்திலும் மிரட்டுவார். அதுதான் தனுஷின் சிறப்பு.
“அவர் தேசிய விருது வாங்கிய நடிகர் மட்டுமல்ல, ஓர் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துக் காட்டியவர். பாடகர், பாடலாசிரியர் என பன்முகங்கள் கொண்டவராகத் திகழ்கிறார்,” என்று பாராட்டித் தள்ளுகிறார் சேகர் கமுல்லா.
இப்படத்தின் கதையைக் கேட்டதுமே நடிக்க ஒப்புக்கொண்டாராம் தனுஷ். இதற்கு முன் தனுஷும் இவரும் நேரில் சந்தித்துக்கொண்டதில்லை. அதனால் தன்னைப்பற்றி அவருக்குத் தெரிந்திருக்குமா என்று சேகர் கமுல்லாவுக்கு சந்தேகம்.
“ஆனால் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது எந்தவித தயக்கமும் இல்லாமல் நான் இயக்கிய படங்கள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் அசந்து போனேன்.
“தொலைபேசி மூலமாகவே ‘குபேரா’ கதை முழுவதையும் அவரிடம் சொன்னேன். கேட்டு முடித்தவுடன், ‘உடனே செய்யலாம்’ என்று கூறிவிட்டார். அதன் பிறகு சென்னையில் சந்தித்தபோது இரண்டு படங்களை இயக்கிக் கொண்டு இருந்தார்.
“அந்தப் படங்களுக்கான படப்பிடிப்பின்போதுதான் ‘குபேரா’வுக்கும் நேரம் ஒதுக்கினார். பொதுவாக படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்வதும், அதை நடத்துவதும் சாதாரண பணியல்ல.
“கதாநாயகனைப் பார்க்க ரசிகர்கள் கூடிவிடுவார்கள். எனவே நான் சற்று தயங்கினேன். ஆனால் தனுஷ், ‘கதைக்குப் பொருத்தமான இடங்களில் படப்பிடிப்பை நடத்துவோம், கவலைப்பட வேண்டாம்’ என்று நம்பிக்கையூட்டினார். அவருடன் பணியாற்றியதை மறக்க இயலாது,” என்கிறார் சேகர் கமுல்லா.
‘குபேரா’ படத்தை வழக்கமான படமாகக் கருத முடியாது என்றவர், இப்படத்தில் அனுபவ நடிகர் நாகார்ஜுனாவும் நடிப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
“இருவரையும் ஒருசேர நடிக்க வைக்கும்போது மிகுந்த கவனம் தேவை. அந்த வகையில் இதை ஒரு சவாலாகக் கருதுகிறேன். மேலும், இரண்டு முன்னணி நடிகர்களை வைத்துப் படம் இயக்கும்போது உழைப்பும் அறிவாற்றலும் தேவை. ஏனெனில், ஒரு சுவாரசியமான திரைப்படத்தை எடுக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்து கொள்கிறது.
“ஒரு நடிகராக தனுஷும் ஒரு இயக்குநராக நானும் இணைந்து ஒரு நல்ல முயற்சியை செய்து இருக்கிறோம் என நம்புகிறேன். நாகார்ஜுனாவுக்கு இதில் மிக வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்துள்ளது.
“இதுவரை அவர் இப்படிப்பட்ட ஸ்டைலான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. இதை அவரே என்னிடம் சொன்னார். தனுஷும் நாகார்ஜுனாவும் அவ்வளவு உச்சத்தில் இருந்தாலும், பழகுவதற்கு எளிமையானவர்கள்.
“படப்பிடிப்பின்போது அண்ணன் தம்பியைப்போல் பழகினார்கள். இருவருக்கும் இடையே அருமையான நட்பும் ஆழமான அன்பும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
“இது சமூக, அரசியல் சார்ந்த கதை. மும்பைதான் கதைக்களம் என்பதால் பெரும்பாலான காட்சிகளை அங்குதான் படமாக்கினோம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற படமாக இருக்கவேண்டும் என்பதால் அனைத்து காட்சிகளையும் யதார்த்தமாகவும் சம்பந்தப்பட்ட இடங்களிலேயே நேரடியாகவும் எடுத்துள்ளோம்,” என்கிறார் சேகர் கமுல்லா.
‘குபேரா’ படத்தில் சுனைனா, பாக்கியராஜ், பகவதி பெருமாள், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வில்லனாக இந்தி நடிகர் ஜிம் சர்ப் நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையும் பெரிதும் பேசப்படுமாம்.
“கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவரது உழைப்பும் ஈடுபாடும் பிரமிக்க வைக்கிறது. இப்படத்தில் ஒப்பந்தமானபோது ‘அனிமல்’ படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். எனினும், சிறிதும் ஓய்வில்லாமல் மும்பை, ஹைதராபாத் எனப் பறந்து பறந்து படப்பிடிப்பில் பங்கேற்றார்,” என்று தன் பட நாயகியையும் பாராட்டுகிறார் சேகர் கமுல்லா.

