மீண்டும் சூடுபிடிக்கும் கோலிவுட் மோதல்

‘பராசக்தி’யைக் கண்டுகொள்ளாத தனுஷ்

2 mins read
50caba1f-86ac-4ceb-a2c3-8c4c7809823b
நடிகர் தனுஷ். - படம்: ஜீ தமிழ் நியூஸ்
multi-img1 of 2

சிவகார்த்திகேயனைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் தனுஷ். ஆனால், தற்போது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தனுஷ் அதைக் கண்டுகொள்ளாமல் மலையாளப் படத்தைப் பாராட்டியிருப்பதும் சம்பள விவகாரத்தில் மூத்தவர் என்கிற உரிமையைக் கோருவதும் கோலிவுட்டில் புதிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை, பாண்டிராஜ் மூலமாகத் தனது தயாரிப்பான ‘எதிர்நீச்சல்’ படத்தில் கதாநாயகனாக்கியதோடு, ‘3’ படத்தில் முக்கியக் கதாபாத்திரமும் வழங்கியவர் தனுஷ்.

ஆனால், காலப்போக்கில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அசுர வேகத்தில் அமைந்தது. ‘மாவீரன்’, ‘அயலான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் அவர் இந்தி திணிப்புக்கு எதிரான போராளியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி திரைப்படம் 100 கோடி ரூபாய் படவரிசையில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது.    

கமல், ரஜினி போன்ற மூத்த நடிகர்களே இப்படத்தைப் பாராட்டி வரும் வேளையில், தனுஷ் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

மாறாக, மலையாளப் படமான ‘எகோ’ (Echo) குறித்துத் தனது எக்ஸ் தளத்தில், “இது ஒரு தலைசிறந்த படைப்பு; உலகத்தரம் வாய்ந்த நடிப்பு,” எனப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் படத்தை அவர் புறக்கணித்திருப்பது இருவரிடையேயான பனிப்போரை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.

இந்தச்சூழலில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டி எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது.

அவர் பேசுகையில், “சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிகளால் தனது சம்பளத்தை 30 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட தனுஷ், தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுகிறார்.

“‘அவர் நேற்று வந்தவர்; நான் அவருக்கு முன்பிருந்தே இங்கு இருக்கிறேன். அவருக்கு 30 கோடி என்றால், எனக்கு 35 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும்’ என மூத்தவர் என்ற முறையில் உரிமை கோருகிறார். வெற்றியைக் கொடுத்து சம்பளத்தை உயர்த்தாமல், மூத்த நடிகர் அடிப்படையில் போட்டி போடுகிறார்கள்,” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

ஏற்கெனவே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், தனுஷின் இந்தப் புறக்கணிப்பும் சம்பளப் போட்டியும் கோலிவுட்டில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்