நடிகர் தனுஷின் மூத்த மகன் ‘யாத்ரா’ தமிழ்த் திரையுலகில் அடுத்த வாரிசு நடிகராக களமிறங்க உள்ளார். அதுவும் தன் தந்தை இயக்கும் படத்திலேயே அவர் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது கூடுதல் தகவல்.
கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் தனுஷ். மாதத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை வழிபாடு செய்யத் தவறுவதில்லை.
இதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திருப்பதி கோவிலுக்கு மாதந்தோறும் வந்து செல்வதாகத் தகவல். என்னதான் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும், மகனின் எதிர்காலம் குறித்த அக்கறை இருவரையும் ஒரு விஷயத்தில் ஒத்துப்போக வைத்திருக்கிறது.
தனுஷ் தன் மகனை வைத்துப் படம் இயக்க முடிவு செய்த தகவல் கிடைத்தவுடன் ஐஸ்வர்யா திருப்பதி கோவிலுக்குச் சென்று மகனுக்காக சிறப்பு வழிபாடுகளை செய்யத் தொடங்கிவிட்டார். அதேபோல், தன் இயக்கத்தில் மகன் யாத்ராவை அறிமுகம் செய்யும் படம் வெற்றிபெற வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக்கொள்கிறார் தனுஷ். இருவரையும் இணைத்த புள்ளி இதுதான்.
தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம்தான் யாத்ரா நடிக்கும் படத்தை தயாரிக்கப்போகிறது. இதற்கான ஏற்பாடுகளை தனுஷ் சத்தமின்றி தொடங்கிவிட்டார்.
மிக விரைவில் படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, தன் தந்தையின் அறிவுரைப்படி கதாநாயகனாக திரையில் தோன்ற, பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம் யாத்ரா.

