கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யூத்’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.
பட வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கென்னின் தாயார் கிரேஸ், தன் மகனின் வளர்ச்சி மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“என் மகனுக்கு ‘அசுரன்’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்தபோது இயக்குநர் வெற்றிமாறன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
“இந்தப் படத்தில் நடித்தால் உங்கள் மகனால் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத முடியாமல் போகலாம். அதற்குச் சம்மதமா? ஆனால் இந்தப் படத்தில் நடித்தால் அவருக்குப் பெரிய எதிர்காலம் இருக்கும் என்றார் வெற்றிமாறன்.
“அதைக் கேட்ட சிறிது நேரத்திலேயே என் சம்மதத்தைத் தெரிவித்தேன். பின்னர் ஒருநாள் என் மகன் எப்படி நடிக்கிறார் என்று கேட்டபோது, ‘நன்றாக நடிக்கிறாய் என்று சொல்லிச்சொல்லி எல்லாரும் அவனை உசுப்பிவிடுகிறார்கள். ஆனால் தனுஷ், அவனை மகனாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார். கென்னும் அவரை அப்பாவாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டால் பிறகு கவலையே இல்லை. காரணம் தனுஷ் ஒரு பல்கலைக்கழகம் போன்றவர். அவரிடம் எல்லா நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம். நடிப்பு மட்டுமல்லாமல், சினிமா குறித்து அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும்’ என்றார் வெற்றிமாறன்.
“இன்று இந்த மேடையில் இப்படிப் பேசுவேன் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. என் மகன் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறான் என்றால் அதற்கு முக்கியக் காரணம் வெற்றிமாறனும் தனுஷும்தான்,” என்றார் கிரேஸ் கருணாஸ்.
இறுதியில் பேசிய தனுஷ், ‘அசுரன்’ படத்தில் தனது மகனாக கென் நடிக்க வேண்டாம் என்று இயக்குநர் வெற்றிமாறனிடம் தாம் தொடக்கத்தில் கூறியதாகக் குறிப்பிட்டார்.
“கென்னைப் பார்த்த உடனேயே, இவன் இதற்கு ஒத்துவர மாட்டான் எனத் தோன்றுகிறது என்றும் இயக்குநரிடம் வெளிப்படையாகத் தெரிவித்தேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“’அசுரன்’ படத்துக்காகப் புகைப்படங்கள் எடுத்தபோது கென்னை அறிமுகப்படுத்தினார் வெற்றிமாறன். பையன் உடல் பெருத்துக் காணப்படுகிறான். எனவே ஒத்துவராது. வேறு யாரையாவது தேடுங்கள் என்றேன்.
“வெற்றிமாறன் உடனே, கொஞ்சம் அவகாசம் கொடுங்க. எடையைக் குறைக்கச் சொல்கிறேன் என்றார். அதன் பிறகு கென்னைப் பார்க்கவே இல்லை.
“முதல் நாள் படப்பிடிப்பின்போதுதான் மீண்டும் சந்திக்க முடிந்தது. அன்று நடித்த முதல் காட்சியிலேயே கென்னிடம் ஏதோ திறமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். இதை வெற்றியிடமும் கூறினேன்.
“சின்னப் பையனாக இருந்தாலும் எல்லார் முன்னிலையிலும் தயக்கமின்றி நடிக்கிறான். நல்ல தேர்வு என்றேன்.
“எனவே, கென்னைக் கண்டுபிடித்த பெருமை முழுக்க முழுக்க வெற்றிமாறனையே சேரும். இதில் எனக்குப் பங்கில்லை.
“அதன்பிறகு நானும் கென்னும் நெருக்கமாகிவிட்டோம்,” என்று கென்னைப் பாராட்டினார் தனுஷ்.

