நடிகர் தனுஷ், ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இதில் நித்யா மேனன் நாயகியாக நடித்துவருகிறார். அருண் விஜய்யும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த தனுஷ் ‘ராயன்’ படத்தில் சறுக்கினார்.
எனவே, இந்தப் படத்தின் இயக்கத்திலும் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அவர் கடுமையாக வேலை செய்து வருவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் ‘இட்லி கடை’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தேனியில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தக் கட்டமாக முதுகுளத்தூரில் ஒரு சண்டை காட்சியையும் தாய்லாந்தில் ஒரு பாடலையும் படமாக்க திட்டமிட்டிருந்தார் தனுஷ்.
ஆனால், திடீரென அனைத்துப் படப்பிடிப்புகளையும் நிறுத்திவிட்டு சென்னைத் திரும்பியுள்ளார். அதற்கு தனுஷின் உடல்நிலை சரியில்லாததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
அண்மையில்தான் தனுஷுக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து நடைபெற்றது. மேலும் நயன்தாராவுடனும் தனுஷுக்கு ஒரு பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படி பல பிரச்சினைகள் அவரைச் சுற்றிக்கொண்டிருக்க தற்பொழுது உடல்நலப் பிரச்சினையும் சேர்ந்து கொண்டதே என்று அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.