‘முதலில் முன்தொகை கொடுப்பவர்களுக்கே ‘கால்ஷீட்’ முன்னுரிமை தர வேண்டும்’ எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பலமுறை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றியும் சில முன்னணி நாயகர்கள் அதை மீறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் வளரும் நாயகனாக இருந்த சமயம், மதன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு சொற்ப தொகையை முன்பணமாக கொடுத்திருந்தது. ஆனால் உடனே படத்தைத் தயாரிக்கவில்லை.
சிவகார்த்திகேயனின் பட வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதும், “நான் கொடுத்த முன்பணம்தான் சம்பளம். அதை வைத்து எனக்கு ஒரு படம் பண்ணிதர வேண்டும்,” எனச் சொல்ல, சிவகார்த்திகேயன் மறுக்க, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து கூடியது. வேறு வழியின்றி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சிவா.
ஆனால், தனுஷ் கோடிக்கணக்கில் முன்பணம் வாங்கிக்கொண்டு ஆறு ஆண்டுகளாக கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் தனுஷுக்கு ஆதரவாக ஒரு மேலிடமும் தனுஷே ஒரு மேலிடம் என்பதாலும் அவரைத் தட்டிக்கேட்க தயாரிப்பாளர்கள் சங்கம் தயங்குவதாகவும் ஒருதரப்பு முணுமுணுக்கிறது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இந்த பிரச்சினையில் தலையிட்டு தனுஷுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசியதாக மற்றொரு புகார் எழுந்துள்ளது.
தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ என இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்தது ஃவைப் ஸ்டார் நிறுவனம்.
‘ஆடுகளம்’ படம் தனுஷுக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தைத்தான் ஆறு ஆண்டுகளாக தவிக்கவிடுகிறாராம் தனுஷ்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, செல்வமணியும் ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பெற்ற முன்பணத்திற்கு நடித்து தருவதே நியாயம் என்று எந்த சங்கத் தலைமைகளுக்கும் தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கலைச்செல்வி.
இந்தச் சிக்கல்கள் காரணமாக தனுஷ் தற்போது நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.