நடிகர் நெப்போலியன் ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் வெற்றி வலம்வந்த ஒரு நடிகர்.
கடந்த 1990களில் சென்னையில் பேரங்காடிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வந்தபோது, தனது மகன் பெயரில் ‘ஜீவன் சூப்பர் மார்க்கெட்’ என்ற பெயரில் வியாபாரத்தை தொடங்கி பல்வேறு கிளைகளையும் உருவாக்கி வெற்றி கண்டார்.
பிறகு அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏ, எம்பி, மத்திய இணை அமைச்சர் என்று அவர் வளர்ச்சி கண்டது தனிக்கதை. சரி நமது கதைக்கு வருவோம்.
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஏற்பாடு சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது.
தனுஷுக்கு ஏற்பட்ட தசைச்சிதைவு நோய்க்கு நிரந்தரமாகச் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் குடியேறிவிட்டார் நெப்போலியன்.
கடந்த ஜூலை மாதம் தனுஷுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. காணொளி வசதி மூலமாகவே தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள மூலக்கடைபட்டியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன்தான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
வரும் நவம்பர் 7ஆம் தேதி ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் தனுஷ், அக்ஷயா திருமணம் நடைபெறும் என அறிவித்துள்ளார் நெப்போலியன்.
தனுஷால் நீண்டதூர விமானப் பயணங்களை மேற்கொள்ள இயலாது என்பதால் அமெரிக்காவில் இருந்து தனது குடும்பத்தாருடன் கப்பல் மூலம் ஜப்பான் சென்றுள்ளார் நெப்போலியன்.
தொடர்புடைய செய்திகள்
சுமார் ஒரு மாதப் பயணத்தின் முடிவில் தோக்கியோ சென்றடைந்த கையோடு, தன்னைப் பாசத்துடன் வழியனுப்பி வைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒருசிலர் இந்த நேரம் பார்த்து சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளனர்.
தசைச்சிதைவு ஏற்பட்டுள்ள மகனுக்கு எதற்காகத் திருமணம்?, மகனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பது மருத்துவ ரீதியாக தெரிந்த பின்னர் அமெரிக்காவில் இத்திருமணத்தை நடத்த முடியாது என்பதால்தான் ஜப்பான் சென்றுள்ளார் நெப்போலியன் என்றெல்லாம் சிலர் சமூக ஊடகங்களில் குறிப்பிட, வேதனையில் மூழ்கியுள்ளது நெப்போலியனின் குடும்பம்.
மணப்பெண்ணின் முழுமையான சம்மதத்துடன் நடக்கும் திருமணம் குறித்து ஒருசிலருக்கு ஏன் வயிற்றெரிச்சல் என்று நெருக்கமானவர்களிடம் நெப்போலியன் புலம்பியுள்ளார்.
மேலும், சமூக ஊடகங்கள் மூலம் உருக்கமான ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
“உலகெங்கும் வாழும் அன்பு தமிழ் சொந்தங்களே, கடந்த ஓராண்டாக ஜப்பான் செல்லத் திட்டமிட்டு, ஆறு மாதங்களாக அதற்கு செயல்வடிவம் கொடுத்து, ஒரு மாதம் பயணம் செய்து எனது மகனின் ஆசையை நிறைவேற்றுகிறோம்.
“மகன் தனுஷின் திருமணம் எங்களுடைய எட்டாண்டுக் கனவு. உண்மை தெரியாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிறரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காதீர்கள்.
“உங்களுக்கும் குடும்பம் உள்ளது. விரிவாகப் பேசினால் ஒரு நாள் அது உங்களை நோக்கியே திரும்பிவிடும்,” என்று நெப்போலியன் மனம் கரைந்து பதிவிட்டுள்ளார்.