திடீரெனக் காலமான மனோஜ் பாரதிராஜா, ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர்ஹிட்டான ‘எந்திரன்’ படத்தில் ‘டூப்’ போட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சிட்டி, வசீகரன் ‘இருவரும்’ இடம்பெறும் காட்சிகளில் இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் ‘டூப்’ போட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் இப்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘எந்திரன்’ படப்பிடிப்பின்போது ரஜினி, மனோஜ் இருவரும் ஒன்றாகக் காணப்படும் படங்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசப்பட்டுவருகிறது. கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பெயர் பதித்த மனோஜ், திரையில் மட்டுமின்றி திரைக்குப் பின்னாலும் பங்காற்றியிருப்பதை இப்படங்கள் எடுத்துக் காட்டுவதாக இந்தியாகிலிட்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சைஃபை (Scifi) படமான இயக்குநர் சங்கரின் ‘எந்திரன்’ ரஜினிகாந்தை மாறுபட்ட பரிமாணத்தில் காண்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் மனோஜ் திரைக்குப் பின்னால் முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிகிறது.
தந்தை பாரதிராஜா இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான அப்படப் பாடல்கள் பெரிதும் பிரபலமடைந்தன.
பின்னர் ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘சமுத்திரம்’ போன்ற படங்களிலும் நடித்துப் பெயர் பதித்தார். அந்தக் காலகட்டத்தில் பிரபலமான இயக்குநர்களாக இருந்த கே.எஸ்.ரவிகுமார், சரண் போன்றோரின் படங்களில் நடித்து அசத்தினார் மனோஜ்.
‘மார்கழித் திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். கடைசியாக 2022ஆம் ஆண்டு வெளியான ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு அண்ணனாக நடித்திருந்தார்.
யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திவந்த மனோஜ் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 48.
தொடர்புடைய செய்திகள்
அவர் ஏற்கெனவே உடல்நலம் குன்றியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மனோஜின் மறைவு திரையுலகம் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. பலர் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
மனோஜ் மறைந்த சோகத்திலிருந்து இன்னும் மீண்டுவராதோர் அவரது படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்துகொண்டு ஆறுதல் தேடிவருகின்றனர்.

