லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன் மகள் ஷ்ருதி ஹாசன்.
விரைவில் திரைகாண உள்ள இப்படத்தில் இந்தி நடிகர் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமென தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் ஷ்ருதி.
“கமல் மகள் என்பதால் இயக்குநர் லோகேஷ் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருப்பதாகக் கருதவில்லை. இன்றைய இளம் இயக்குநர்கள் திறமைசாலிகள். சிறு கதாபாத்திரமாக இருந்தாலும், தகுந்த நடிகர், நடிகையரைத் தேர்வு செய்கிறார்கள்,” என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினி பல்வேறு குணாதிசயங்களின் கலவை என்றும் ரஜினி கத்தியைப் போன்று மிகக் கூர்மையானவர் என்றும் வர்ணித்துள்ளார் ஷ்ருதி.
“என் தந்தையும் ரஜினியும் தமிழ் சினிமாவின் இரு தூண்கள். மற்ற அனைவரையும் போன்று நானும் ரஜினியை உச்ச நட்சத்திரமாகவே அறிந்திருந்தேன்.
“அவர் அறிவாற்றல் மிக்கவர். ஆனால் மிக அன்பானவர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
“ரஜினி படப்பிடிப்புக்கு வரும்போது தன்னுடைய நேர்மறையான ஆற்றலையும் கொண்டு வருகிறார். அதனால்தான் அவரைச் சுற்றி நின்று வேலை செய்வதில் எல்லாருமே மகிழ்ச்சி அடைகிறார்கள்.
“எனக்கும் அப்படிப்பட்ட அனுபவம்தான் கிடைத்தது. அந்த வகையில் மனநிறைவு ஏற்பட்டது,” என்று கூறியுள்ளார் ஷ்ருதி ஹாசன்.