மக்களுக்கான நல்ல படைப்பாக ‘டீசல்’ படம் உருவாகி உள்ளது என்கிறார் அதன் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.
இவர் காலஞ்சென்ற இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
“காதல், நகைச்சுவைப் படங்கள், பேய்க் கதைகள் எனப் பல ரகங்கள் நம்மிடையே உள்ளன. நம்மைச் சுற்றி நடக்கும் அரசியலைப் பேச மறந்துவிட்டோம்,” என்று சண்முகம் முத்துசாமி கவலைப்படுகிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் இல்லாமல் மனிதர்களால் வாழ இயலாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதாகச் சுட்டிக்காட்டுபவர், பெட்ரோல், டீசல் பின்னால் இருக்கும் மிகப் பெரிய அரசியல் குறித்து பெரும்பாலானோர்க்குத் தெரியாது என்கிறார்.
“பெட்ரோல் எப்படி நம்மை வந்தடைகிறது என்பதை இந்தப் படம் விவரிக்கும். இது மக்களிடம் சென்றடைய வேண்டிய அரசியல்.
“மக்கள் கேள்வி கேட்க வேண்டிய அரசியல். பலரும் சொல்லத் தயங்குவதை நாங்கள் ‘டீசல்’ படம் மூலம் தெளிவாகப் பேசியுள்ளோம்,” என்கிறார் சண்முகம் முத்துசாமி.
பொதுவாகப் பெட்ரோல், டீசல் எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து விநியோகிக்கப்படுவதாகக் குறிப்பிடும் இயக்குநர், அப்படிப்பட்ட ஓர் இடத்தில் இருந்து இக்கதையின் நாயகன் உருவாகிறான் என்கிறார்.
பெட்ரோல், டீசல் வணிகத்தைக் கடந்து நாயகன் பாதிக்கப்படும்போது என்ன முடிவெடுக்கிறான், அதை எப்படிச் செயல்படுத்துகிறான் என்பதுதான் கதையாம்.
தொடர்புடைய செய்திகள்
முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்துப் பேசினாலும், அனைத்து வணிக அம்சங்களுடன் சுவாரசியமாகவும் எளிமையாகவும் திரையில் காட்சிப்படுத்தி உள்ளனராம்.
“கதைப்படி, நாயகன் மிகப் பொறுப்பாகச் செயல்பட வேண்டும். அதனால் பாத்திரத்தை நன்றாக உணர்ந்து நடிக்கும் நல்ல நடிகர் தேவைப்பட்டார். நன்றாக நடிக்க வேண்டும், நான்கு பேரை அடித்துத் துவைத்தால் நம்பும் வகையில் இருக்க வேண்டும்.
“கதையை அதன் வேரோடு புரிந்துகொள்வதும் அவசியம். எல்லாவற்றுக்கும் பொருத்தமாக ஹரீஷ் கல்யாண் வந்தார்.
“எத்தகைய பாத்திரத்துக்கும் சூழலுக்கும் அவரது முகம் பொருந்திப் போகிறது. சினிமாவை ஆழமாக நேசிக்கிறார். அவரது வித்தியாசமான, ‘ஆக்ஷன்’ வியூகம் இந்தப் படத்தில் இருந்து தொடங்குகிறது,” என்று தன் நாயகனைப் பாராட்டுகிறார் சண்முகம் முத்துசாமி.
ஹரீஷ் கல்யாண் ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். வில்லனாக மீண்டும் அசத்தியுள்ளார் வினய்ராய்.
காளி வெங்கட், லொள்ளு சபா மாறன், கருணாஸ், ரமேஷ் திலக், தங்கதுரை உள்ளிட்ட மேலும் பலர் வலுவான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.