இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி முன்னணிப் பாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘கஸ்தூரி வீடு’. லயன்வி பிலிம்ஸ், ரென்டெக் பிலிம்ஸ் சார்பில் எம்.ஜே.எப்.லைன் டாக்டர் வாகேஷ், ராணி ஸ்ரீரெட்டி ஆகியோர் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இதில் யோகி பாபு, தம்பி ராமையா, தனுஜா உள்ளிட்ட நடிகர்கள் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் இசை, முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
புனித நூல்களான பைபிளிலும் குர்ஆனிலும் குறிப்பிடப்படும் தஜ்ஜால் என்ற சாத்தானின் பின்னணியைக் கொண்ட பேய்க்கதையாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாகவும் சமுத்திரக்கனி கதாபாத்திரமாகவே மாறி அசத்தியுள்ளார் என்றும் கதாநாயகி தனுஜா பயந்து அழும் காட்சிகளில் செயற்கைக் கண்ணீரின்றி இயல்பாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
திட்டமிட்டதைவிடத் திரைப்படச் செலவு நான்கு மடங்கு அதிகரித்தபோதிலும், தரமான திரைப்படத்தைக் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் ஊக்கமளித்தனர். வித்தியாசமான திரையனுபவத்தைத் தரும் ‘கஸ்தூரி வீடு’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
