கேள்வி கேட்பதிலும் கண்ணியம் இருக்க வேண்டும்: மாளவிகா மோகனன்

கேள்வி கேட்பதிலும் கண்ணியம் இருக்க வேண்டும்: மாளவிகா மோகனன்

படம்: எக்ஸ் தளம்/ மாளவிகா மோகனன்

22 May 2026 - 3:41 pm

2 mins read

தென்னிந்தியத் தி‌ரைத் துறையில் முக்கியக் கதாநாயகியாக இருக்க வேண்டும் என்பதில் மாளவிகா மோகனன் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் தனியார் விழா ஒன்றில் மாளவிகா மோகனன் கலந்து கொண்டார். அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “நீங்கள் விஜய்யுடன் திரிஷா போன்று பயணம் செய்வீர்களா?” எனக் கேட்கப்பட்டது.

அப்போதே ‘இது தேவையற்ற கேள்வி’ என்று மாளவிகா மோகனன் தெரிவித்துவிட்டார்.

இந்தக் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பலரால் பார்க்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

“அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துச் செய்தியாளர்கள், ஊடகத் துறையினர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தாலும், அவர்களில் ஓரிருவர் முற்றிலும் தேவையற்ற, பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கமுடைய, மிகவும் நாகரிகமற்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே வருகின்றனர்,” என்று மாளவிகா மோகனன் குறிப்பிட்டுள்ளார்.

“விஜய்யை எனக்குக் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தெரியும். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். மேலும், அவரை ஒரு நண்பராகக் கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவரது திரைப் பயணத்தை உற்றுநோக்குவது, வியக்கத்தக்க ஓர் அனுபவமாகவே இருந்து வருகிறது.

“இனிவரும் காலங்களில் ஊடகங்களுடனான கலந்துரையாடல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட அனைவரின் நலன் கருதி, கண்ணியத்துடனும் இருதரப்பு மரியாதையுடனும் அமைந்தால் பெரிதும் வரவேற்பேன்,” என்று மாளவிகா மோகனன் குறிப்பிட்டுள்ளார்.

‘பட்டம் போலே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, இன்று இந்தியத் திரையுலகில் கவனிக்கத்தக்க நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன், தன்னைச் சுற்றி எழும் விமர்சனங்களுக்குப் பக்குவமாகப் பதிலடி கொடுத்தும் வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திதிரைப்படம்