புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் காலமானார்

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் காலமானார்

3 mins read
பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை என முதல்வர் அறிவிப்பு
096416c8-c001-4e1c-b4c3-f9fa0ac56a96
பாக்யராஜின் மறைவால் திரைப்பட உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். - படம்: மாலை மலர்

புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலை காலமானார். அவருக்கு வயது 73.

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான பாக்யராஜ், 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனித்துவமான கதைக்களம், நகைச்சுவையுடன்கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் புகழ்பெற்ற அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பாக்யராஜ் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இதற்கிடையே, மறைந்த இயக்குநர் பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்,” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் 1953ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் பாக்யராஜ். தமிழ்த் திரையுலகில் நடிகர், வசனம் எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர். தொடக்கத்தில் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

1979ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவருக்கு மனைவி பூர்ணிமா, மகன், மகள் உள்ளனர். உடல்நலத்துடன் இருந்த பாக்யராஜ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அவரது திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடம்பிடித்திருப்பதற்கு அவரது தனித்துவமான திரைக்கதை உத்தியே காரணம். குறிப்பாக, இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்த பாக்யராஜ், பெண்களைக் கவரும் வகையில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக, கடந்த 2012ஆம் ஆண்டில் தனது மகன் நடிப்பில் ‘சித்து பிளஸ்2’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

பாக்யராஜ், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், எஸ்.வி.சேகர், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பல இயக்குநர்களை உருவாக்கியுள்ளார்.

ஜூன் 10ஆம் தேதி திரு பாரதிராஜா உயிரிழந்த நிலையில் 17 நாள்கள் இடைவெளியில் பாக்யராஜும் மரணமடைந்தது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில், சிவப்பு ரோஜாக்கள் போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய பின்னர் இயக்குநராகவும் நடிகராகவும் கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பாக்யராஜ் பெரிதும் வெற்றி பெற்றார்.

அவர் இயக்கி, நடித்த மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா போன்ற படங்கள் 1980களில் வசூல் சாதனை படைத்தன.

அவர் மறைவுக்குத் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

சிறந்த இயக்குநரும் நடிகரும் இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான பாக்யராஜ் உடல்நலக்குறைவால் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக தமது இரங்கல் செய்தியில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “We the leaders” அமைப்பின் தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ஆகியோரும் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரையரங்கு