சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கோலோச்சிவந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84.
முதுமையாலும் கடுமையான நுரையீரல் தொற்றாலும் திரு பாரதிராஜா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவரை மருத்துவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும்படி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஜூன் 10) காலை இவரது உயிர் பிரிந்தது.
கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் திரு பாரதிராஜா.
வித்தியாசமான கதைக்களங்கள், காட்சிகளைப் படமாக்கும் பாணி, எதிர்பாராத திரைக்கதைத் திருப்பங்கள் என தமது வித்தியாசமான படைப்புகளின்மூலம் தமிழ்ச் சினிமாவின் புதிய இலக்கணத்தை எழுதினார் திரு பாரதிராஜா.
படப்பிடிப்பு அரங்குக்குள் முடங்கிக்கிடந்த கேமராவைக் கிராமத்து வயல்வெளிகளுக்குக் கொண்டுசேர்த்தவர் என்ற பெருமை இவருக்குண்டு.
அவரது மண் வாசனையுடன் கூடிய படைப்புகளுக்கு இன்றளவும் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.
‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் பெருவரவேற்பை பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஏராளமான புதுமுகங்களை இவர் அறிமுகப்படுத்தினார். தமது உதவி இயக்குநர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகளை வழங்கி அவர்களையும் புகழ்பெற வைத்தவர்.
உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜைக் கதாநாயகனாக மாற்றினார். தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து உருவானவர்கள்.
இயக்குநர் என்பதைக் கடந்து திரு பாரதிராஜாவுக்குள் சிறந்த நடிகரும் இருந்தார். தமது திரைப்படங்களில் சிறு காட்சிகள் மட்டும் தலைகாட்டியவர், பின்னர் பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்தார்.
இசையமைப்பாளர்கள் இளையராஜாவும் கங்கை அமரனும் இவரது நெருங்கிய நண்பர்கள். ஒருவரையொருவர் ஒருமையில் அழைத்துக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிப் பழகிய மூவரும் தமிழ்த் திரையுலகில் இணைந்து செயல்பட்டு தரமான படங்களை வழங்கியது தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று சினிமா விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாரதிராஜாவைச் சிறப்பிக்கும் விதமான ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கியது இந்திய அரசு. இந்திய அளவிலும் மேலும் பல விருதுகளையும் மாநில அரசுகளின் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
மகன் மனோஜ் பாரதிராஜா திடீரென காலமானதால் பெருஞ்சோகத்தில் மூழ்கிய பாரதிராஜா, கடந்த ஓராண்டாகக் கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இடையில் சில நாள்கள் மலேசியாவில் வசிக்கும் தம் மகள் வீட்டுக்குச் சென்றும் தங்கியிருந்தார்.
திரு பாரதிராஜாவால் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ராதிகா சில வாரங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
அச்சந்திப்பு குறித்துப் பேட்டியளித்த அவர், மகன் மனோஜின் மறைவு திரு பாரதிராஜாவின் மனத்தை வெகுவாகப் பாதித்துள்ளது என்றார்.
அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

