தேசிய விருது பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) காலை காலமானார்.
50 வயதான செழியனின் மறைவு தமிழ்த் திரையுலகத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த செழியன், பிசி ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘கல்லூரி’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஏற்றம் கண்டார்.
தொடர்ந்து, பாலாவின் ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, சீனு ராமசாமியின் ‘தென்மேற்கு பருவக்காற்று’, ராஜு முருகனின் ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல உன்னதமான எதார்த்தப் படங்களுக்குக் கண்முன்னே காட்சிகளை மிக இயல்பாக ரசனை மிக்கதாகக் கடத்தினார்.
பின்னர், ‘டூலெட்’ (Tolet) திரைப்படத்தின் மூலம் இயக்குநராகப் பரிணமித்தார்.
அனைத்துலக அளவில் பல பாராட்டுகளைப் பெற்ற இப்படம், சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதையும் வென்று சாதனை படைத்தது. உலக சினிமா குறித்த ஆழமான பார்வைகொண்ட இவர், அது தொடர்பாகப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். புதிய படைப்பாளிகளை உருவாக்குவதற்காகப் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி, பல இயக்குநர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
அண்மையில் பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற மூத்த இயக்குநர்களின் மறைவால் சோகத்தில் இருந்த திரையுலகிற்கு, செழியனின் இந்த அகால மரணம் ஈடுசெய்ய முடியாத மற்றுமொரு பெரும் பேரிழப்பாக அமைந்துள்ளது.


