வாய்ப்பு மறுத்த இயக்குநர்: கண் கலங்கிய நடிகர் வையாபுரி

வாய்ப்பு மறுத்த இயக்குநர்: கண் கலங்கிய நடிகர் வையாபுரி

2 mins read
5ed74a8a-07ba-4ad2-8b06-c18659152484
நகைச்சுவை நடிகர் வையாபுரி. - படம்: விகடன்
Google News Preferred Icon

திரைப்படங்களில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதன் பின்னணி குறித்து நகைச்சுவை நடிகர் வையாபுரி மனம் திறந்து பேசியுள்ளார்.

1990கள், 2000களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வையாபுரி.

கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான ‘உடன்பிறப்பு’ திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான வையாபுரி, பல நூறு படங்களில் நடித்துள்ளார். தற்போதும் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர், இன்ஸ்டகிராமில் இணைந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே ஒரு லட்சம் பின்தொடர்பவர்களை எட்டியுள்ளார்.

இதனையொட்டி உணர்வுபூர்வமாக காணொளி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், இன்ஸ்டகிராமில் இணைந்த காரணத்தைப் பகிர்ந்து கொண்ட வையாபுரி, இயக்குநர் ஒருவர் தன்னைச் சந்திக்க மறுத்த சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

“தயாரிப்பு மேலாளர் ஒருவர் இயக்குநரைப் பார்க்குமாறு கூப்பிட்டதால் நானும் அவருடைய அலுவலகத்திற்குச் சென்றேன்.

“ஆனால் அந்த இயக்குநர், ‘அவர் பழைய கலைஞர்; நான் இல்லை’ என்று சொல்லிவிடுங்கள் என மேலாளரிடம் கூறியுள்ளார்,” என்றார்.

“இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் வழி நிறைய பேர் எனது நட்பு வட்டத்துக்குள் இணைகிறார்கள். ஆனால், இயக்குநர் என்னை பழைய கலைஞர் என்று கூறியதைக் கேட்டு மனமுடைந்தேன்.

“அதற்குப் பிறகுதான், நாம ஏன் இன்ஸ்டகிராமில் கணக்கு ஆரம்பிக்கக்கூடாது என்று ஆரம்பித்தேன்.

“இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக்கில் உள்ள புதிய நடிகர்களுக்கே புதிய இயக்குநர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். அவர்களுக்கு என் அனுபவத்தை நினைவூட்டவே இன்ஸ்டாவில் கணக்குத் தொடங்கினேன்,” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்த ஒரு மாதத்தில் மக்கள் என்மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்; இதுவே எனக்குப் போதும்,” என்றும் வையாபுரி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பழைய கலைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக அவர் ஆதங்கப்பட்ட இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்