தமிழ்த் திரையுலகின் இளம் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் சங்கையா, உடல்நலக் குறைவால் நவம்பர் 15ஆம் தேதி காலமானார்.
40 வயதான அவர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் வெள்ளிக்கிழமை இரவு காலமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
விதார்த் நடித்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுரேஷ் சங்கையா.
முதல் படத்திலேயே விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். பின்னர் நடிகர் பிரேம்ஜி அமரனை வைத்து இவர் இயக்கிய ‘சத்திய சோதனை’ என்ற படமும் பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றது.
மேலும் ஒரு படத்தை இயக்கி முடித்த நிலையில், நடிகர் யோகி பாபுவை வைத்து சுரேஷ் சங்கையா இயக்கி வந்த படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே, மஞ்சள் காமாலை நோயின் தாக்கம், சிறுநீரகப் பிரச்சினை ஆகியவற்றால் அவர் இறக்க நேரிட்டதாகத் திரையுலக நணபர்கள் தெரிவித்தனர். சுரேஷ் சங்கையாவின் சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும். இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.