‘சத்தியவான் சாவித்திரி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள புதுப் படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவருடன் மோதும் மற்றொரு வழக்கறிஞராக அசத்தி உள்ளார் மிஷ்கின்.
அறிமுக இயக்குநர் பிரவீன் விஜய் இயக்கியுள்ளார். இவர், தாஸ் ராமசாமி, விக்னேஷ் சிவன், கௌதம் ராமச்சந்திரன் ஆகிய இயக்குநர்களிடம் பாடம் பயின்றவர்.
இந்தக் கதையை முதலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம்தான் கூறியுள்ளார் இயக்குநர். ஆனால் முழுக் கதையையும் கேட்ட அவர், கீர்த்தி சுரேஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
“இவரிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது, கேட்டுப் பாருங்களேன்,” என்று அவரே கீர்த்தியைத் தொடர்புகொண்டு விவரமும் தெரிவித்தாராம்.
“ஐஸ்வர்யா ராஜேஷ்தான் எனக்கான ஒரு கதவைத் திறந்துவிட்டார். அன்றைக்குத் தொடங்கியது இந்தப் படம். என் வாழ்க்கையின் சில சிறப்பான தருணங்களாக இதில் வேலை பார்த்ததைச் சொல்வேன்,” என்கிறார் பிரவீன் விஜய்.
“இந்தப் படம் ஒரு நீதிமன்றத்தில் நடக்கும் சட்டப்போராட்டத்தை விவரிக்கும் வகையில் உருவாகி உள்ளது. இந்த மாதிரி கதைகளில் சிலர் சமூக நலனுக்காகப் போராடுவார்கள், சிலர் அதில் வெற்றி பெறுவார்கள். இப்படித்தான் சித்திரிக்கப்படும்.
“இல்லையென்றால் ‘விதி’ படம் போன்று தன் சொந்தப் பிரச்சினைகளுக்காக, தனக்கான பாதிப்பிலிருந்து எழுந்து நிற்கப் போராடுவார்கள். இதில் இரண்டுமே இருக்கின்றன,” என்கிறார் இயக்குநர் பிரவீன் விஜய்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தொடக்கத்தில் கலகலப்பான, உற்சாகமான சராசரிப் பெண்ணாகத்தான் திரையில் தோன்றுவாராம். நல்ல மனைவியாகவும் வாழ்க்கை நடத்துவார். ஒரு காலகட்டத்தில் தன் சொந்தத் திறமையால் ஒரு முக்கியமான வழக்கை எடுக்க வேண்டிவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
அவர் வழக்கை நடத்த முடியாதபடி உணர்வுபூர்வமான, வலிதரும் சில விஷயங்கள் இருக்கும். மூத்த, அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் தவறான பக்கம் வாதாடும்போது, அதை அவருக்கு உணர்த்த கீர்த்தி முற்படும்போது, அவரது அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் விதமாகவும் இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பதுதான் கதையாம்.
“நம் அனைவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. அதை எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். எதற்காகப் பயன்படுத்துவது என்ற கேள்விக்கான நல்ல விடைதான் சாவித்திரியின் வாழ்க்கை.
“சில தருணங்களில், சில விவகாரங்கள் தொடர்பாக என்ன முடிவெடுக்கலாம் என்பது நமக்குத் தெரியாது. எதை, எப்படிப் புரிந்துகொள்வது என்பதும் சில நேரங்களில் நமக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணை வாழ்க்கை எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது என்பதை உணர்வுபூர்வமாகவும் அர்த்தமுள்ளதாகவும் எடுத்துவைக்கும் படம்தான் இது,” என்கிறார் பிரவீன் விஜய்.
நாயகி கீர்த்தி சுரேஷ் தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிட்டாராம். மிக இயல்பாகவும் ஆழமாகவும் அனைவரது மனத்தையும் தொட்டுவிடுவது போன்று அவரால் எதையும் மிகையில்லாமல் நடிக்க முடிகிறது எனப் பாராட்டுகிறார்.
“இயக்குநர் மிஷ்கின் நடிப்பிலும் மிகுந்த அனுபவம் கொண்டவராக மிளிர்கிறார். தனக்குப் பொருந்தும் கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வார். அவருக்கு இப்படத்தின் கதை பிடித்துப்போனது.
“அவரது சம்பளத்தைக் கேட்டதும் தயாரிப்புத் தரப்பில் கொஞ்சம் தயங்கினார்கள். ஆனாலும் என் வாடிய முகத்தைப் பார்த்துச் சம்மதித்தார்கள். கீர்த்தி சுரேஷுக்குச் சமமான பாத்திரம். நடிப்பில் இருவருக்கும் சரிக்குச் சரியான போட்டி எனலாம்.
“மொத்தத்தில் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது,” எனக் கூறியுள்ளார் பிரவீன் விஜய்.

