பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதில் முக்கியப் பங்காற்றிய நெல் ஜெயராமன், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ எனப் போற்றப்படுகிறார்.
12 ஆண்டுகள் தொடர்ந்து நெல் திருவிழா நடத்தி, 174 அரியவகை நெல் வகைகளைச் சேகரித்த இவர், கடந்த 2018ஆம் ஆண்டு தோல் புற்றுநோயால் காலமானார்.
நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவரது மகன் சீனிவாசனின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குறுதி அளித்திருந்தாராம்.
தாம் அளித்த வாக்கை மீறாமல் கடந்த ஏழு ஆண்டுகளாக அதற்கான தொகையைக் கொடுத்து வருகிறார் என்று இயக்குநர் இரா. சரவணன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
“இவ்வாறு வாக்கு அளிப்பவர்கள், அப்போதைக்கு சிறு தொகை கொடுத்து உதவுவார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்புகாட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள்.
“ஆனால், பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நேரத்தில் சீனிவாசனைத் தொடர்புகொண்டு அன்பும் அக்கறையுமாய் விசாரிப்பார்.
“ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் தன் மகனுக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதையெல்லாம் சிவா செய்கிறார். நம்பிக்கையாகவே நின்றுகாட்டும் தம்பிக்கு நன்றி,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் இரா. சரவணன்.