சங்கரின் இயக்கத்தில் ராம் சரணின் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்மையில் சங்கர் இயக்கிய ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியானது முதல் சந்திக்காத விமர்சனங்களே இல்லை எனலாம். முதல்முறையாக ‘இந்தியன் 2’ மூலம் தோல்வியைச் சந்தித்தார் சங்கர். இந்நிலையில் ஒரு பேட்டியில் “இந்தளவிற்கு ‘இந்தியன் 2’ கடுமையான விமர்சனங்களைப் பெறும் என எதிர்பார்க்கவில்லை,” என்று சங்கர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து சங்கர் தற்போது இயக்கி வரும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகின்றது.
வழக்கமாக சங்கரின் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு இல்லை. அதற்கு உண்மையான காரணம் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் தோல்வியாக இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முன்னோட்டக் காட்சியும் ரசிகர்களைப் பெரியளவில் ஈர்க்கவில்லை.
அதனால் படத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில்தான் சங்கர் உட்பட படக்குழு அனைவரும் அமெரிக்காவில் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது மட்டுமல்லாமல் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. எனவே முன்பதிவில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் நல்ல வசூலை பெறும் எனத் தெரிகின்றது.