2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் தமிழ் சினிமா பெரும் ஏற்றத்தைக் காணப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அப்படியான ஏற்றம் வராமல் ஏமாற்றம்தான் கிடைத்தது. எதிர்பார்க்கப்பட்ட படங்கள் கூட மிக அதிகமான வசூலைத் தராமல் சுமாரான வசூலுடன் முடிவுக்கு வந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தன. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த 2024ஆம் ஆண்டு ஏமாற்றங்களின் ஆண்டாகத்தான் அமைந்தது.
அயலான், கேப்டன் மில்லர்
புது வருடம் பிறந்ததுமே வரும் முக்கிய பண்டிகை நாளான பொங்கலை முன்னிட்டு இந்த ஆண்டு ‘அயலான்’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘அயலான்’ படம் சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வருமோ, வராதோ என்ற நிலையில் வெளிவந்தது. இருந்தாலும் எதிர்பார்த்தபடி அதன் வரவேற்பு அமையவில்லை. தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘கேப்டன் மில்லர்’ படம் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதே ஒரு குழப்பம்தான். வரலாற்றுப் படமாக ஏதோ ஒரு விதமாக எடுத்து வெளியிட்டு தோல்வியைத் தழுவினார்கள்.
லால் சலாம்
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘லால் சலாம்’. சிறப்புத் தோற்றம் என்று சொன்னாலும் படம் முழுவதுமாக வரும் காட்சிகள்தான் ரஜினிகாந்திற்கு அமைந்தது. படத்தின் சில முக்கியக் காட்சிகள் காணாமல் போய்விட்டன என்ற நிலையில் எப்படியோ சமாளித்து படத்தை வெளியிட்டார்கள். எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாத படமாக அமைந்தது.
சிங்கப்பூர் சலூன், சொர்க்கவாசல்
‘எல்கேஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ என இரண்டு படங்கள் மூலம் ரசிகர்களிடம் நகைச்சுவைக் கலந்த கதாநாயகனாக வரவேற்பைப் பெற்றார் ஆர்ஜே பாலாஜி. அவரது நடிப்பில் இந்த ஆண்டுத் துவக்கத்தில் வெளிவந்த ‘சிங்கப்பூர் சலூன்,’ ஆண்டு இறுதியில் வெளிவந்த ‘சொர்க்கவாசல்’ ஆகிய இரண்டு படங்களுமே மிகச் சுமாரான படங்களாகவே அமைந்தன.
சைரன், பிரதர்
தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு நிலையான வரவேற்பு கொண்ட நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இந்த ஆண்டில் அவர் நடிப்பில் வெளிவந்த ‘சைரன்’, ‘பிரதர்’ ஆகிய இரண்டு படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்தன. கதைகளைத் தேர்வு செய்வதில் அவர் எவ்வளவு தடுமாற்றத்தில் இருந்துள்ளார் என்பதற்கான உதாரணம்தான் இந்தப் படங்கள். ‘கோமாளி’ படத்திற்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தனித்த வெற்றிக்கு தடுமாறி வருகிறார்.
ரெபெல், கள்வன், டியர்
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியவர் ஜிவி பிரகாஷ்குமார். அவர் நடிக்க ஆரம்பித்த பின் ஒவ்வொரு ஆண்டும் அவரது நடிப்பில் இரண்டு, மூன்று படங்களாவது வந்துவிடும். ஆனாலும், கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியை இன்னும் பதிவு செய்யாமல் இருக்கிறார். இறுதியாக 2021ல் அவரது நடிப்பில் வெளிவந்த ‘பேச்சுலர்’ படம்தான் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் நடிகராக வெற்றியைப் பதிவு செய்யாமல் இருக்கிறார்.
ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர்
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியவர்களில் மற்றுமொருவர் விஜய் ஆண்டனி. இந்த ஆண்டு அவர் நடித்து வெளிவந்த படங்கள் ‘ரோமியோ’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘ஹிட்லர்’. மூன்று படங்களுமே வியாபார ரீதியாக வரவேற்பைப் பெறாத படங்கள்தான். ‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனிக்கு அது போன்றதொரு வெற்றி இன்னும் கிடைக்காமல் உள்ளது. அந்தப் படத்திற்குப் பின் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். தன் படங்களில் என்ன சிக்கல் என்பதை அவர் ஆராய வேண்டிய நேரமிது.
பி.டி.சார், கடைசி உலகப் போர்
ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி வரிசையில் இசையமைப்பாளர் டூ கதாநாயகனாக மாறியவர்களில் ஹிப்ஹாப் தமிழாவும் ஒருவர். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வந்த ‘பி.டி. சார்’, ‘கடைசி உலகப் போர்’ ஆகிய இரண்டு படங்களுமே ஓடவில்லை. ‘நட்பே துணை’ படத்திற்குப் பிறகு அவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிக்காகத் திண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியன் 2
சங்கர், கமல்ஹாசன், அனிருத் என வெளியீட்டிற்கு முன்பே அதிகம் பேசப்பட்ட கூட்டணி. சங்கரும், கமல்ஹாசனும் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள் என்பதெல்லாம் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், படத்தின் முதல் காட்சியிலேயே படத்திற்கான விமர்சனங்கள் படத்தை தோல்விக் குழியில் தள்ளிவிட்டன. இதுவரையில் எந்த ஒரு படத்திற்கும் இந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்குமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வெளிவந்தது. பிரம்மாண்டம் மட்டுமே போதாது என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்திய ஒரு படம்.
தங்கலான்
நடிகராக ஒருவர் என்னதான் உழைப்பைக் கொட்டினாலும் படத்தின் ரசிகர்களையும் ஈர்க்கும் விதத்தில் ஏதாவது ஒரு அம்சம் இருந்தாக வேண்டும். அப்போதுதான் அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பேசப்படும். இந்தப் படத்திற்காக நடிகர் விக்ரம் கொடுத்த உழைப்பு அனைத்துமே விழலுக்கு இறைத்த நீராகிப் போனதுதான் மிச்சம். இன்னும் எத்தனை படங்களுக்குத்தான் அதே பாணியிலான கதையை வைத்து காலத்தைத் தள்ள முடியும் என்பதை இயக்குநர் பா ரஞ்சித்துக்கு இந்தப் படம் புரிய வைத்திருக்கும்.
வேட்டையன்
2023ஆம் ஆண்டு ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த படங்களில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படமும் ஒன்றாக இருந்தது. அவரது அடுத்த படமாக வெளிவந்த ‘வேட்டையன்’ படமும் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், முழுமையான ரஜினிகாந்த் படமாக இல்லாமல் போனதுதான் இந்தப் படத்திற்கு எதிர்மறையாக அமைந்துவிட்டது. ரூ.200 கோடி வசூலை மட்டுமே கடந்தது என்று சொல்லப்பட்டு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
பிளடி பெக்கர்
2023ஆம் ஆண்டு ரூ.600 கோடி வசூல் படமான ‘ஜெயிலர்’ படத்தை இயக்கியவர் நெல்சன். அவரது தயாரிப்பில் இந்த ஆண்டில் வெளிவந்த படம் ‘பிளடி பெக்கர்’. படம் வெளியவாதற்கு முன்பாக இந்தப் படம் பற்றி பெரிய அளவில் பேசினார்கள். ஆனால், படம் வெளிவந்த பின் அத்தனையும் வீணாகிப் போய்விட்டது. சினிமா தயாரிப்பு என்பது சாதாரணமானதல்ல என்பதை நெல்சன் நிச்சயம் உணர்ந்திருப்பார்.
கங்குவா
இந்தப் படத்தின் ஒட்டுமொத்த தோல்வியையும் தயாரிப்பாளரின் ஒரே ஒரு பேட்டிதான் ஆரம்பித்து வைத்தது. ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக இந்தப் படம் வசூலிக்கும் என அதன் தயாரிப்பாளர் அதிக தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுத்தார். அவ்வளவு சிறப்பாக படம் இருக்குமோ என்று எதிர்பார்த்த ரசிகர்கள் முதல் காட்சியைப் பார்த்ததுமே ஏமாந்து போனார்கள். எப்பேர்ப்பட்ட படம் எடுத்தாலும் அடக்கி வாசிக்க வேண்டும் என பலருக்கும் இந்தப் படம் புரிய வைத்தது.
2024ஆம் ஆண்டில் இதுவரையில் 220 படங்கள் வரை வெளிவந்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் பல படங்கள் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி பின் ஏமாற்றத்தைத் தரும். இந்த ஆண்டில் அப்படியான படங்கள் நூற்றுக்கும் மேல் உள்ளன. ஆனாலும் சில முக்கியமான படங்களைப் பற்றித்தான் மேலே குறிப்பிட்டிருந்தோம்.
இந்த சமூகவலைத்தள, யூடியூப் யுகத்திலும் ஒரு படத்தை மக்களிடம் சரிவர கொண்டுபோய் சேர்க்க முடியாத பலர் படங்களைத் தயாரிக்கவும், இயக்கவும் வருகிறார்கள். பல படங்கள் ஒரு காட்சி கூட ஓடாமல் திரையரங்கை விட்டு தூக்கப்பட்ட வரலாறும் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளது.
சினிமா என்பது ஒரு கலை, அதை மக்கள் விரும்பும் வகையில் கொடுக்கும் கலைஞர்களே வெற்றி பெறுகிறார்கள். ஏதோ கடமைக்காக படங்களை எடுக்க வருபவர்களை தமிழ் ரசிகர்கள் உடனே புறக்கணிக்கத் தயங்குவதில்லை. அதைப் புரிந்து கொண்டாவது வரும் காலங்களில் ஓரளவுக்காவது தரமான படங்களைக் கொடுக்க புதியவர்கள் முயற்சி செய்யட்டும் என்கின்றனர் வலைத்தளவாசிகள்.