குடும்பப்பாங்கான கதாநாயகி என்றால் இயக்குநர்களின் முதல் விருப்பம் பிரியா பவானி சங்கர்தான்.
தற்போது ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நாயகியாக நடிக்கிறார். இதற்கு முன்பு ‘பிளாக்’, ‘ஸீப்ரா’ என வரிசையாக திகில் படங்களாகவே அவருக்கு அமைந்தன.
“இதற்கு என்ன காரணம் என்றெல்லாம் நான் யோசித்ததே இல்லை. இந்தக் கதை நமக்கு ஒத்துவரும் என்று தோன்றினால் அதைத் தயக்கமின்றி ஒப்புக்கொள்வேன். நீங்கள் குறிப்பிடும் மூன்று படங்களுமே திகில் வகையைச் சேர்ந்தவைதான். ஆனால் வெவ்வேறு பாதைகளில் நகரும் கதைகள். அதனால்தான் மூன்றும் வெற்றிபெற்றன.
“திகில், பேய்க் கதைகளுக்கு மக்களிடம் எப்போதுமே வரவேற்பு கிடைக்கும். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற பயத்துடன் காத்திருப்பதை ஒவ்வொரு ரசிகரும் தன் மனத்துக்குள் ரசிப்பது எனக்குத் தெரியும். காரணம் நானும் இதுபோன்ற படங்களின் ரசிகைதான்,” என்கிறார் பிரியா.
பேய், பிசாசு என்பதில் எல்லாம் தனக்குப் பெரிதாக நம்பிக்கை ஏதும் கிடையாது என்று சொல்பவருக்கு, இருட்டு என்றால் மட்டும் கொஞ்சம் அச்சம்.
சின்னத்திரை தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இது தன் வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராத நல்ல திருப்பம் என்கிறார்.
“இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் சில முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. கதைகளைத் தேர்வு செய்வதில் இரண்டு முக்கியமான அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கதை, தயாரிப்பு நிறுவனம் ஆகிய இரண்டும் சரியாக அமைந்தால் மட்டுமே ஒரு படத்தில் என்னைப் பார்க்க முடியும்.
“ஒரு வலுவான கதை அமையும்போது, தயாரிப்பு நிறுவனமும் அதை மக்களிடம் சரியாக கொண்டு சேர்த்தால் மட்டுமே எல்லாருடைய உழைப்பும் வெளியே தெரிய வரும்,” என்று ஊடகப் பேட்டி ஒன்றில் பிரியா கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தெலுங்கில் முன்னணி நாயகரின் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம். அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தமிழ், தெலுங்கு திரையுலகங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்தது என்று கூறுபவர், தனிப்பட்ட வாழ்க்கை, வேலை என இரண்டிலும் பிரச்சினைகள் இன்றி நன்கு கவனம் செலுத்த முடிந்தது என்கிறார்.
பயணங்கள் என்றால் பிரியாவுக்கு மிகுந்த விருப்பம். ஓயாத படப்பிடிப்புகளுக்கு இடையே பத்து நாள்கள் ஓய்வு கிடைத்தால் உடனே பெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுகிறார். பயணங்கள் தரும் இனிய அனுபவங்களைப் பொக்கிஷமாகக் கருதுகிறாராம்.
“ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் வெளியூர், வெளிநாடு என ஏதாவது இடத்துக்குச் செல்வேன். புதுப்புது தகவல்களைத் தெரிந்துகொள்வது, சாகசங்கள் செய்வது, அந்தந்தப் பகுதிகளில் உள்ள உணவு வகைகளை ரசித்துச் சாப்பிடுவது ஆகியவைதான் எனக்கு மிகவும் பிடித்தமானவை,” என்று கண்கள் விரிய, அவற்றில் வியப்பு பரவச் சொல்கிறார் பிரியா.
ஐரோப்பா சென்றிருந்தபோது சுலோவேனியாவில் உணவு வகைகள் பிரமாதமாக இருந்ததாம். அங்குள்ள சிற்றூரில் மதிய உணவு சாப்பிட்டபோது அதன் ருசி மனத்தை மயக்கியதாம்.
“அதுபோன்ற தெய்வீக உணர்வு, அனுபவம் வேறு எங்கும் ஏற்பட்டதில்லை. அதை வாழ்நாளில் மறக்க இயலாது. இன்னொரு முறை அங்கு சென்று மதிய உணவு சாப்பிட வேண்டும் என ஆசையாக உள்ளது,” என்கிறார்.

