திருமணம் நடந்தால் சொல்கிறேன், வதந்திகளைப் பரப்பாதீர்: திவ்யா காட்டம்

2 mins read
ae598bbe-a287-4794-a04a-4853396acdd3
நடிகை திவ்யா ஸ்பந்தனா. - படம்: ஊடகம்

கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் திவ்யா ஸ்பந்தனா. சிம்புவுடன் குத்து படத்தில் நடித்ததிலிருந்து தமிழில் அவர் குத்து ரம்யா என்று அழைக்கப்படுகிறார். அவரது உண்மையான பெயர் திவ்யா ஸ்பந்தனா. குத்து தவிர்த்து தமிழில் அவர் கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமன்றி மக்களவை உறுப்பினராகவும் இருந்த அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

பெங்களூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் திவ்யா ஸ்பந்தனா. கன்னடத்தில் புனீத் ராஜ்குமாருடன் திவ்யா நடித்த படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றதையடுத்து தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தில் நடித்தார். குத்து படத்தில் அவர் ரம்யா என்ற பெயரில் அறிமுகமானார். அப்போதிலிருந்து அவர் குத்து ரம்யா என்று அழைக்கப்படுகிறார்.

தமிழில் அவர் நினைத்தது போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேசமயம் கன்னடத்தில் வாய்ப்புகள் அவருக்குத் தொடர்ந்து கிடைத்தன. அதனைப் பயன்படுத்திக்கொண்டு முன்னணி நடிகையாகக் கன்னடத்தில் வலம் வர ஆரம்பித்தார் திவ்யா ஸ்பந்தனா.

தொடர்ந்து கன்னடத்தில் நடித்துவந்த திவ்யாவுக்கு வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக ஆனது. அதற்குப் பிறகு வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். தமிழில் பெரும் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு அடுத்ததாக ஜீவா நடித்த சிங்கம் புலி படத்தில் மட்டும்தான் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் தோல்வியடைந்த நிலையில் தமிழ்த் திரையுலகம் திவ்யாவை ஒட்டுமொத்தமாக மறந்தது.

அதற்குப் பிறகு அரசியலில் களம் இறங்கினார். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் காங்கிஸ் சார்பாகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் அவர் பதவி வகித்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டுகூட அவர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை எற்படுத்தியது. அதற்குப் பிறகு திவ்யா ரகசியத் திருமணம் செய்துகொண்டார் என்றும் பல முறை தகவல்கள் பரவின. அவை அனைத்தும் வதந்திகளே.

இந்நிலையில், தற்போது அவர் திருமணம் செய்துகொண்டார் என மீண்டும் தகவல்கள் பரவின. அதனை மறுத்து காட்டமாகப் பதிவு ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் திவ்யா. அதில், “எனக்குப் பல முறை ஊடகங்கள் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். எத்தனை முறை என்பதை நான் மறந்தும்விட்டேன்.

“நான் ஒருவேளை உண்மையில் திருமணம் செய்துகொண்டால் நானே சொல்வேன். வதந்திகள் பரப்புவதை நிறுத்துங்கள்,” என்று அவர் காட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்