நயன்தாராவின் தீபாவளி விருந்து

2 mins read
f999ce58-4ab2-44e4-8342-57bd17e8e851
நயன்தாரா. - படம்: ஊடகம்

நயன்தாரா புதுப்படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ, ஆனால் எப்போதுமே அவர்தான் தமிழ்த் திரையுலகில் பரபரப்பு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தத் தீபாவளியைப் பொறுத்தவரை நயன்தாராவின் தீபாவளியாகத்தான் இருக்கப்போகிறது என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.

நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் வெகுநாள் காதலித்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி, சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமண புகைப்படங்கள் மட்டும் நயன்தாரா சார்பில் ஊடகங்களுக்குத் தரப்பட்டதே தவிர, திருமணக் காணொளி ஏதும் வழங்கப்படவில்லை.

“எப்படியாவது காணொளி எடுத்துப் போட்டுவிட வேண்டும்,” என ‘யூட்யூபர்’கள் தலைகீழாக நின்று பார்த்தார்கள். ஆனால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அவர்களுடைய முயற்சிகள் எதுவுமே பலன் அளிக்கவில்லை.

காணொளி எடுக்க அனுமதிக்கப் படாததற்குக் காரணம் இதுதான்.

‘நெட்ஃபிளிக்ஸ்’ இணையத்தளத்திற்கு கோடிகளில் விலைபேசி திருமண காணொளியை ஓர் ஆவணப்படமாகத் தயாரித்து நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் முன்பே விற்றுவிட்டார்கள்.

இந்த ஆவணப்படத்தை இயக்குநர் கௌதம்மேனன் இயக்கினார்.

2022ஆம் ஆண்டு நயன்தாரா, விக்னேஷ் சிவன் தலைத் தீபாவளியன்றே இந்தத் திருமண ஆவணப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், பல்வேறு நடைமுறைச் சிக்கலால் 2024 தீபாவளிக்கு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.

நடைமுறைச் சிக்கல்களில் ஒன்றாக, நயன்தாராவை நாயகியாக வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படங்களின் சில காட்சிகள் இந்த ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ‘ஆட்சேபணை இல்லை` எனும் சட்டபூர்வ கடிதங்களைப் பெறுவதில் சிக்கல் இருந்ததால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாகவும் இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

அந்தக் கடிதங்கள் வாங்கப்பட்டனவா? அல்லது அந்தக் காட்சிகள் இல்லாமலே திருமணத் திரைப்படம் வெளியாகிறதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

மிகச் சரியாக 81 நிமிடங்கள் (ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள்) ஓடக்கூடியதாக இருக்கிறது இந்த ஆவணப்படம்.

தீபாவளி விடுமுறையின்போது இது வெளியாகும் பட்சத்தில், வேறு நிகழ்ச்சிகளை ரசிகர்கள் பார்ப்பார்களா என்ன?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண ஆவணத் திரைப்படத்திற்கு ‘நயன்தாரா: பியாண்ட் த ஃபேரி டேல்’ (BEYOND THE FAIRY TALE) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையே, நயன்தாரா நடிப்பில் அடுத்த ஆண்டு தீபாவளியின்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நான்கு படங்கள் வெளியாகுமாம். இவற்றுள் இரண்டு படங்களை அவரது சொந்த நிறுவனமே தயாரிக்க இருப்பதாகக் கூறப் படுகிறது.

மேலும், அடுத்த ஆண்டு முன்னணி கதாநாயகர்கள் பலருடன் இணைந்து நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம் நயன்தாரா. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என நயன்தாரா தரப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்