தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதர்வா, நடிப்பு ‘ராட்சசி’ இணையும் ‘டிஎன்ஏ’

3 mins read
661a9311-3d76-4a04-910f-cb3c02461fe0
‘டிஎன்ஏ’ படத்தில் அதர்வா, நிமிஷா. - படம்: ஊடகம்

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ‘டிஎன்ஏ’ திரைப்படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது.

இதற்கு முன்பு, ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர், இம்முறை தனது முந்தைய மூன்று படங்களில் இருந்து வேறுபட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கதையை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார்.

“ஒரு வேலையை மீண்டும் மீண்டும் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. புதிதாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது குணம். வலியின்றி ஆதாயம் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

“கடந்த எட்டு ஆண்டுகளாக என் மனதில் இருந்த, எனக்கு மிகவும் பிடித்தமான கதை இது. எல்லோரும் விரும்பும் வகையில் படமாக்கி உள்ளேன். நிச்சயமாக நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும். மேலும், தொடங்கிய நிமிடத்தில் இருந்து பார்ப்பவர்களை வசீகரிக்கும்,” என்கிறார் நெல்சன் வெங்கடேஷ்.

‘டிஎன்ஏ’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஆனந்த், திவ்யாவாக நடிகர் அதர்வாவும் மலையாள நடிகை நிமிஷாவும் நடித்துள்ளனர்.

இரு கதாபாத்திரங்களின் ஆரம்பப் புள்ளியும் முடிவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தங்கள் பயணத்தில் எங்கே சந்திக்கிறார்கள், அதன் பின்னர் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு அலைந்து திரிந்துச் செல்கிறது என்பதுதான் கதை.

“மனதுக்குப் பிடித்த இருவரை திரையில் பார்ப்பது போன்ற எண்ணத்தை இருவரும் தோற்றுவித்தார்கள். இளையர்களை அதிகம் கவனத்தில் கொண்டு காட்சிகளை அமைத்துள்ளேன்.

“ஆனந்தும் திவ்யாவும் புறக்கணிக்கப்பட்ட சூழலில் உள்ளனர். அப்போது அவர்களது திருமணம் நடக்கிறது. புறக்கணிக்கப்பட்ட இருவர் ஒன்றுசேர்ந்தால் அந்த வாழ்க்கை அவர்களை எங்கு கொண்டுபோய் சேர்க்கும், ஏன் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்பதை விளக்கும் வகையிலும் இந்தக் கதை நகரும்,” என்று தலைப்புக்கான விளக்கத்தை விவரிக்கிறார் இயக்குநர்.

திருமணத்துக்குப் பிறகு ஒரு கட்டத்தில் இருவரது வாழ்க்கையும் மாற்றம் காண்கிறது. அதன் பிறகு அதிரடிச் சண்டைகளும் குற்றச் சம்பவங்களும் நிறைந்த கதையாக மாற்றம் பெறுமாம். மொத்தத்தில் யதார்த்தமும் உண்மையும் கலந்துள்ள படம்தான் ‘டிஎன்ஏ’ என்கிறார்.

நாயகன் அதர்வாவைப் பொறுத்தவரை அனைத்துப் படங்களிலும் அவரது நிறைவான பங்களிப்பு இருக்கும் என்று குறிப்பிடும் நெல்சன், அதர்வாவுக்குச் சினிமா மீதான பிரியம் தம்மை வியக்க வைப்பதாகச் சொல்கிறார்.

“சினிமா குறித்த அனைத்தையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதர்வாவிடம் உள்ளது. அவரது அண்மைய சில படங்களில் பார்த்திராத பல முகபாவங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்.

“இதுதான் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. குறைந்த வயதில் அவருக்குள்ள புரிதல் அபாரமானது. இந்தப்படம் உருவாகியுள்ள விதம்தான் மனதில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி என்னை இயல்பாகப் பேச வைத்துள்ளது.

“தமிழகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்புதுப் படங்கள் வெளியாகும். பல கதாநாயகர்கள் வருவார்கள். அப்படி வருபவர்களிடம் இருந்து அதர்வா தள்ளி நிற்பதாகப் பார்க்கிறேன்.

“கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருப்பவர்களின் பயணத்தைப் பாருங்கள். யாருடைய தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரியாக இருக்காது. சிலருக்குத் தொடக்கம் நன்றாக இருக்கும் எனில், நடுப் பகுதி தொய்வாகக் காணப்படும். பிறகு மீண்டும் வந்து பெரும் நடிகராகவோ நட்சத்திரமாகவோ மாறியிருப்பார்கள்.

“உதாரணத்துக்கு விக்ரம், சூர்யா ஆகியோரைக் குறிப்பிடலாம். அதர்வாவுக்கும் இந்தப் பயணம் பொருந்தும் எனக் கருதுகிறேன்,” என்று தனது பட நாயகனை நெல்சன் வெங்கடேசன் பாராட்டுகிறார்.

‘நடிப்பு ராட்சசி’ எனத் திரையுலகில் செல்லமாகக் குறிப்பிடப்படுகிறார் நிமிஷா. இந்தப் படத்தின் கதையை இணையம் மூலம் சுமார் இரண்டு மணி நேரம் விரிவாகக் கேட்டாராம். பிறகு சில சந்தேகங்களை எழுப்பி விளக்கங்களைப் பெற்றாராம்.

இப்படத்தில் இயல்புக்கு மாறான ஒரு பெண்ணாக நடித்துள்ளார் நிமிஷா. சபை நாகரீகம், எப்படிப் பேசுவது எனப் பொதுவாக உள்ள கட்டுப்பாடுகள் ஏதும் அவருக்குத் தெரிந்திருக்காதாம்.

“இத்தகைய கதாபாத்திரத்தைக் கச்சிதமாக திரையில் வெளிப்படுத்தக்கூடிய நடிகைகள் இந்திய அளவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர்,” என்கிறார் நெல்சன் வெங்கடேசன்.

“இந்தத் திறமையால்தான் இந்தியத் திரையுலகின் முக்கியமான நடிகையாக உள்ளார் நிமிஷா. நல்ல கதாபாத்திரங்களைத் தேடிச் சென்று நடிக்கிறார்.

“இப்படத்தில் அதர்வா, நிமிஷா இணையின் முக்கியத்துவமும் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், சேத்தன், விஜி சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவமும் சிறப்பாக இருக்கும்,” என்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

இந்தப் படத்தில் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிகரன், பிரவீண், சாகி சிவா, அனல் ஆகாஷ் என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றி உள்ளனராம்.

குறிப்புச் சொற்கள்