பெண்களைச் சீண்டுவதுபோன்று நடிக்க விரும்பவில்லை: அஜித்

2 mins read
8d53a534-3af9-48a0-83a7-f0fe23582acf
‘குட் பேட் அக்லி’ படத்தில் இடம்பெற்ற காட்சியில் அஜித், திரிஷா. - படம்: ஊடகம்

ஒருவித குற்ற உணர்ச்சி காரணமாகவே தாம் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்ததாக ‘இந்தியா டுடே’ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் அஜித்.

அதற்கு முன்பு தாம் நடித்த சில படங்கள்தான் இந்தக் குற்ற உணர்ச்சி ஏற்பட முக்கியமான காரணமாக இருந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.

“பெண்களைச் சீண்டுவது போன்ற விஷயங்களை என்னுடைய திரைப்படங்கள் ஊக்குவிப்பது போலத் தோன்றியது.

“வில்லன்கள் கதாநாயகிகளைத் தொந்தரவு செய்யும்போது கதாநாயகன் சென்று அவர்களைக் காப்பாற்றுவது, காதல் என்கிற பெயரில் கதாநாயகன் கதாநாயகிகளைத் தொந்தரவு செய்வது போன்ற சித்திரிப்புகள் என்னுடைய படங்களில் தொடர்ந்திருக்கின்றன. அவ்வாறு நடிக்க விரும்பவில்லை,” என்று அஜித் தெரிவித்துள்ளார்.

திரையில் நடிகர்கள் செய்வதைத்தான் ரசிகர்கள் பின்பற்ற நினைப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது முந்தைய படங்களில் செய்த தவறுகளைச் சரிசெய்வதற்கு ‘நேர்கொண்ட பார்வை’ படம் ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

“இதற்காக இந்தியில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தை மறுபதிப்பு செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நான் இப்போது கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். இதே நிலைப்பாட்டிலிருக்கும் தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் சந்திப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

“நான் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதைத் திட்டமிட முடியாது. ஒருவேளை ஏதேனும் கட்டத்தில் நான் திடீரென ஓய்வை அறிவிக்கும் சூழலுக்கு தள்ளப்படலாம்,” என அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் அஜித்.

இதற்கிடையே, அஜித்-விஜய் ரசிகர்களிடையே மீண்டும் இணையவெளியில் மோதல் வெடித்துள்ளது.

முன்புபோல் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் வசைபாடி வருகின்றனர்.

“இருவரது ரசிகர்களும் இணக்கமாக, ஒற்றுமையாக இருந்துவிடக்கூடாது என்பதில் ஒருதரப்பு நீண்ட காலமாக முனைப்பாக உள்ளது. அவர்களைப் போன்றவர்கள்தான் ரசிகர்களை இவ்வாறு மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்,” என்று மூத்த செய்தியாளர் ஆர்.எஸ். அந்தணன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்