சமந்தா மேடைகளில் நிற்கும்போது அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைப் பற்றி பலரும் பலவிதமாக பதிவிட்டதைத் தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார் சமந்தா.
சமந்தா ‘ட்ரலாலா பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் ‘சுபம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் மே 9 வெளியாகிறது.
படத்தின் விளம்பர நிகழ்ச்சி மே 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் சமந்தா மேடையில் கண்கலங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
அதற்கு நெட்டிசன்கள் பலரும், ‘சமந்தா மிகவும் பாவம், அவரது மனத்தில் நிறைய வலி இருக்கிறது’ என்று இணையத்தில் பதிவிட்டனர்.
அதனைத் தெளிவுபடுத்தும் வகையில் இன்ஸ்டகிராமில், “நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விசாகப்பட்டின மக்களுக்கு நன்றி. நீங்கள் என்மீது காட்டும் அன்புக்கு மிக்க நன்றி.
“நான் கண்கலங்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதனை நான் ஏற்கெனவே பல இடங்களில் கூறியிருக்கிறேன்.
“ஆனாலும் மீண்டும் கூறுகிறேன். என் கண்கள் மிகவும் சென்சிட்டிவானவை. கூசும்படியான வெளிச்சத்தைப் பார்த்தால் என் கண்ணிலிருந்து நீர் வடியும்.
“இதனைப் பலரும் நான் கவலையில் அழுகிறேன் என்று நினைக்கிறார்கள். நான் நன்றாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று சமந்தா கூறியுள்ளார்.