இனிமேல் தன்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட வேண்டாம் என நடிகை நயன்தாரா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தன் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது என்றும் ரசிகர்களின் எல்லையற்ற அன்பும் ஆதரவும் அதற்கு அழகு சேர்த்துள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ஒரு தரப்பினர் குறிப்பிடத் தொடங்கியதில் இருந்து சர்ச்சை வெடித்தது.
தென்னிந்திய ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் அது ரஜினிதான் என்றும் அதே போன்று அடைமொழியை வைத்து ஒரு நடிகையை அழைப்பது சரியல்ல என்றும் ரஜினி ரசிகர்கள் குரல்கொடுத்தனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
ரஜினிக்கு முன்னணித் தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம்தான் இன்றளவும் நிலைத்து நிற்கிறது.
“இந்தப் பட்டத்துக்கு ஏற்ப அவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். வெளிநாடுகளில்கூட அவரது படங்கள் வசூலை வாரிக்குவிக்கின்றன.
“ஆனால், நயன்தாரா தனி நாயகியாக நடித்த எத்தனை படங்கள் வெற்றி பெற்றுள்ளன. குறைந்தபட்சம் தோல்வி அடையாமலாவது இருந்திருக்கின்றனவா? அவருக்கு எப்படி அந்தப் பட்டம் பொருந்தும்?” என்பதே ரஜினி ரசிகர்களின் கேள்வி.
மேலும், நயன்தாராவுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைக் கொடுத்தது யார் என்ற கேள்வியையும் சிலர் சமூக வலைத்தளங்களில் எழுப்பி அவரைக் கிண்டல் செய்தனர்.
இவையெல்லாம் நயன்தாராவை மனம் நோகச் செய்ததாகவும் அதனால்தான் திடீர் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
“நான் ஒரு நடிகையாக பயணித்துவரும் இந்தப் பாதையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்து ஆதாரங்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.
“நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள் என்பதற்கான என் உள்ளார்ந்த ஆசையாக இந்தக் கடிதம் அமைந்திருக்கட்டும்.
“என் வெற்றியின்போது என்னைத் தோளில் சாய்த்துப் பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னைத் தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள். பலரும் என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வாழ்த்தி இருக்கிறீர்கள்.
“உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை ‘நயன்தாரா’ என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்று நயன்தாரா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தனது இயற்பெயர்தான் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றும் அப்பெயரானது தன்னை மட்டும் குறிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு தனிநபராகவும் பார்க்கும்போது பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான் என்று குறிப்பிட்டுள்ள நயன்தாரா, எனினும் சில சமயங்களில் அவை வேலையிலிருந்து, நம் கலைத் தொழிலிலிருந்து, ஒருவரது அன்பான தொடர்பிலிருந்து பிரித்துவிடக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
“நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் அன்பின் மொழி நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்திருக்கிறது. எதிர்காலம் எதைக் கொண்டு வந்தாலும், உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதை தெரிந்துகொள்வதில் எனக்குப் பேரானந்தம்,” என்றார் நயன்தாரா.
“அதேசமயம், உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமாதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது. அதை நாம் எல்லோரும் சேர்ந்து கொண்டாடிக்கொண்டே போகலாம்,” என்று நயன்தாரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

