நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கூடாது என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு வணிக அமைப்பின் தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த மாநாட்டை நடிகர் கமல்ஹாசன், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய கமல்ஹாசன், இந்திய கலாசாரத்தின் உண்மையான தூதராக திரையுலகம்தான் திகழ முடியும் என்றார்.
“இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு ஒரு நீண்டகால தொலைநோக்குத் திட்டம் தேவை. இதற்காக மத்திய, மாநில அரசுகள் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களைக் கட்டுப்படுத்தாமல் சந்தை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்,” என்றார் கமல்ஹாசன்.
இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர்.
அப்போது மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடிக்கும் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்றும் சக்திவேல் நாயக்கர் நல்லவரா கெட்டவரா என்றும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நகைச்சுவையாகப் பதில் அளித்த கமல்ஹாசன், “நான் மீண்டும் மணிரத்னத்தைச் சந்திக்க வேண்டாமா. மொத்த கதையையும் மிக எளிதாகத் தட்டிவிட்டீர்களே என்று என்னைப் பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?
தொடர்புடைய செய்திகள்
“நீங்கள் இந்தப் படம் முழுவதும் பார்த்தால்கூட உங்கள் கேள்விக்கு விடை கிடைக்காது. சக்திவேல் நாயக்கர் நல்லதும் கெட்டதும் சேர்ந்தவர்தான்,” என்றார் கமல்ஹாசன்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய திரிஷா, கமல்ஹாசன் நடித்த பல படங்களைத் தாம் 30, 40 முறை பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
“திரு கமல்ஹாசன் நடித்த படங்களைப் பார்த்துத்தான் நான் வளர்ந்தேன். கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்து முடித்துவிட்டார். ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நாயகன்’, ‘தேவர் மகன்’ ஆகிய படங்களைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.
“அன்றைய நாள் சிறப்பாக இருந்தாலும், மோசமாக இருந்தாலும் கமல் நடித்த படங்களைப் பார்ப்பது வழக்கம். ‘விக்ரம்’ படம்தான் எனக்கு மிகவும் பிடித்தமானது. திரையரங்குகளில் மூன்று முறையும் பின்னர் வீட்டில் இரண்டு முறையும் அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தேன்.
“வேறு சில நல்ல படங்களை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்காதீர்கள். நீங்கள் கேட்டதும் எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது இந்தப் படங்கள்தான்,” என்றார் திரிஷா.
கமல்ஹாசன் இயக்கி நடிப்பதாக இருந்த, அவரது கனவுப்படமான ‘மருதநாயகம்’ படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1997ஆம் ஆண்டு, அந்தப் படத்துக்கு பூசை போட்டார் கமல். அதில், இங்கிலாந்து ராணி எலிசபெத், அன்றைய முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எனினும், பணப் பிரச்சினை காரணமாக இந்தப் படம் பாதியில் கைவிடப்பட்டது. அரை மணி நேரம் ஓடக்கூடிய காட்சிகளைப் படமாக்கியிருந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த அவர், அங்கு செயற்கை நுண்ணறிவு குறித்த தகவல்களைத் திரட்டி இருக்கிறார். மேலும், ‘ஏஐ’ தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொண்டாராம்.
இதையடுத்து, ‘மருதநாயகம்’ படத்துக்கு ‘ஏஐ’ மூலம் மீண்டும் உயிரூட்டுவதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் கமலுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.