சமூக ஊடகங்களில் நல்ல உடற்கட்டுடன் தோற்றமளிக்கும் புகைப்படங்களைப் பதிவிடுவதற்காக, பெண்கள் ஆரோக்கியத்துக்குப் புறம்பாக தங்களை வருத்திக் கொள்ளக் கூடாது என்று பிரபல நடிகை டாப்சி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சி, அண்மையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பெண்களின் உடல்நலம், உடற்பயிற்சி குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
“நான் வளரும்போது தட்டையான (Flat) உடலமைப்பைக் கொண்டிருந்ததால், எப்போதும் அப்படியே இருப்பதுதான் அழகு என்று தவறாக நினைத்துக்கொண்டேன்.
“இதனால், என் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதற்காக, எல்லை மீறி தீவிர உடற்பயிற்சிகளைச் செய்து என்னை நானே பலமுறை துன்புறுத்திக் கொண்டேன்.
“ஆனால், அது முற்றிலும் தவறானது என்பதை இப்போதுதான் உணர்ந்துள்ளேன்,” என்று டாப்சி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர்களின் விளக்கம்
ஒரு பெண்ணின் உடல் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களைக் கடந்து செல்வதை டாப்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
“பெண்கள் தினமும் தங்களது வயிறு ஒரேவிதமாக ஒட்டினாற்போல் தட்டையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு மாறானது.
“இதனை எனது ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கிய பிறகே நான் தாமதமாகப் புரிந்துகொண்டேன்,” என்று அவர் பகிர்ந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பெண்களின் உடலமைப்பிற்குப் பின்னால் இருக்கும் மருத்துவக் காரணங்கள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில்தான் இனப்பெருக்க உறுப்புகள் அமைந்துள்ளன. அந்த முக்கிய உறுப்புகளைப் பாதுகாப்பதற்கு அடிவயிற்றில் சிறிதளவு கொழுப்பு இருப்பது உடலியல் ரீதியாக மிகவும் அவசியமான ஒன்று.
எனவே, சமூக ஊடகங்களில் மற்றவர்களைக் கவர்வதற்காகப் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் உடலின் இயற்கையான அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் டாப்சி அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
“இன்ஸ்டகிராம் போன்ற பக்கங்களில் நாம் பார்க்கும் பல புகைப்படங்கள் நிஜமானவை அல்ல. அவை குறிப்பிட்ட கோணங்களில், பிரத்யேக வெளிச்சத்தில் முகத்தைக் கூடுதல் அழகாகக் காட்டும் ‘பில்டர்’ செயலிகளைப் பயன்படுத்தி எடுக்கப்படுபவை.
“நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு மனிதரும் 24 மணி நேரமும் அப்படிப் பளபளப்பாக இருக்க முடியாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மன அமைதிதான் உண்மையான ரகசியம்
“எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பட்டினி கிடப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பாரம்பரிய உணவுகளையும் என் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் சரியாக எடுத்துக் கொள்கிறேன்.
“உடற்பயிற்சி என்பது உடலைத் தண்டிக்கும் விஷயம் அல்ல; அது நம் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்த வேண்டும்.
“உடற்பயிற்சிக் கூடத்தில் பல மணி நேரம் கிடப்பதைவிட, மன அமைதியோடு மகிழ்ச்சியாக இருப்பதுதான் ஒருவரை அழகாகக் காட்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட், தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கென தனிப்பாதையை உருவாக்கியது குறித்துப் பேசிய டாப்சி, “நான் சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் வந்தவள். அதனால் தோல்விகளைக் கண்டு நான் பயந்ததில்லை.
“எனக்குத் திரையில் வெறும் கவர்ச்சி பொம்மையாக வந்து போக விருப்பமில்லை. கதையின் நாயகியாக, மக்கள் மனதில் பதியும் கதாபாத்திரங்களில் நடிப்பதே எனக்குப் பெருமை,” என்று கூறியுள்ளார்.

