திரையுலகைச் சேர்ந்தவர் வேண்டாம்: பார்வதி

3 mins read
d3159e76-c8c5-4b01-8fdc-6b3d97f5f82b
பார்வதி. - படம்: kerala9.com
multi-img1 of 2

பூ’ படத்தின் நாயகி பார்வதியை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

நல்ல நடிகை என்பது ஒரு பக்கம் இருக்க, மனத்தளவில் அன்பானவர், பிறர் மீது அக்கறை கொண்டவர் என்ற நல்ல பெயரையும் சம்பாதித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான, குறிப்பாக நடிகைகளுக்கு எதிரான விவகாரங்கள் என்றால் அவை குறித்து துணிச்சலாக கருத்தை வெளியிடுவார்.

அண்மைய பேட்டியில் அவர் மனம் திறந்து கூறியுள்ள சில விஷயங்கள் மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனது முந்தைய காதல் அனுபவங்களை அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் பார்வதி.

தன்னுடைய முன்கோபத்தாலும் பிடிவாதத்தாலும் அழகான காதலை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தாம் காதலித்த இரண்டு காதலர்களுடன் இன்னமும்கூட தொடர்பில் இருக்கிறாராம். எனினும், பரஸ்பர நல விசாரிப்புகளைக் கடந்து, தன் வாழ்க்கையில் அவர்கள் இருவருக்கும் இப்போது எந்த இடமும் இல்லை என்று கூறியுள்ளார்.

“நீண்ட இடைவெளிக்குப்பிறகு எனக்குப் பிடித்தமான அந்த முன்னாள் காதலரைச் சந்தித்தேன். அப்போது எனது செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நான் யாருடனும் நெருக்கமாக இல்லை. ‘டேட்டிங்’ போன்ற அணுகுமுறைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது.

“மனிதர்களுடன் நேரடியாகப் பேசிப் பழகி, அன்பைப் பரிமாறிக்கொள்வதையே விரும்புகிறேன். எனக்கும் ஒரு துணை தேவைதான். ஆனால், அந்த வாழ்க்கைத் துணையாக வரக்கூடியவர் நடிகராகவோ இயக்குநராகவோ இருக்க மாட்டார்,” என்று குறிப்பிட்டுள்ளார் பார்வதி.

இவரது காதல் பயணம் இவ்வளவு சோகமானது என்றால், நடிகை மீனாட்சி சௌத்திரி காதலிக்காமலேயே பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்.

இவருக்கும் நடிகர் சுஷாந்துக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் பல இடங்களில் காதல் ஜோடி சுற்றித்திரிவதாகவும் தெலுங்கு, இந்தி ஊடகங்களில் தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகின்றன.

இதனால் கடும் எரிச்சலடைந்த மீனாட்சி, “என்னுடன் பணியாற்றும் நடிகர்களைக் காதலிக்க வேண்டும் என்றால் எனக்கு நாளொன்றுக்கு 24 மணிநேரம் போதாது.

“மேலும், அப்படிப்பட்ட காதலர் கிடைத்தாலும் காதலிப்பது மட்டுமே என் வேலையாக இருக்கும். அந்த அளவுக்கு ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றன,” என்று ‘லக்கி பாஸ்கர்’, ‘கோட்’ படங்களின் நாயகியான மீனாட்சி கோபப்படுகிறார்.

நடிகர் சுஷாந்த் தனது நல்ல நண்பர் என்றும் திரைத்துறையைச் சார்ந்த யாரையும் தான் காதலிக்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மீனாட்சிக்கு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர்தான் தனது கணவராக வர வேண்டும் என விருப்பமுள்ளது. அதிலும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பவர் என்பது கூடுதல் தகுதியாக அமையுமாம்.

“நான் அடிப்படையில் பல் மருத்துவர், நீச்சல் வீராங்கனை. திருமணத்துக்குப் பிறகு மருத்துவமனையிலும் நீச்சல் குளத்திலும் அதிக நேரத்தைச் செலவிட விரும்புகிறேன்,” என்கிறார் மீனாட்சி.

இந்தியத் திரையுலகில் இன்னொரு எம்ஜிஆராக உருவாக வேண்டும் என்ற கனவுடன் வலம் வருகிறார் இயக்குநரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா. வயது கூடிக்கொண்டே போவதால் நண்பர்கள் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்களாம்

இந்நிலையில், அவர் காதல்வயப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பும் ஒரு நடிகையைத் தீவிரமாக காதலித்திருந்தார் எஸ்ஜே சூர்யா. இம்முறை திரையுலகத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாதவர்தான் அவரது மனதைக் கவர்ந்துள்ளார்.

இந்தப் புதிய காதலாவது கைகூட வேண்டுமென அவரது நலவிரும்பிகள் விரும்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்