ஜூலை 16ஆம் தேதி திடீரென இயக்குநர் சேரனிடம் இருந்து ஓர் அறிவிப்பு வெளியானது. அவர் நடிக்கும் அல்லது இயக்கும் படம் குறித்த அறிவிப்பாக இருக்கும் எனப் பெரும்பாலானோர் ஊகித்துவிட்டனர்.
அதுவும் சரிதான். சேரனும் தமது அறிவிப்பில் இப்படித்தான் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று உங்கள் பேராதரவுடன் ஒரு புதிய பயணம் தொடங்குகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் தேவை. மற்ற செய்திகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும்.
“ஒரு முக்கிய திரைப்படம் மக்களுக்காகத் தயாராகிறது. விடியல் ஆரம்பம்,” என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சேரன்.
அவரது ‘ஆட்டோகிராஃப்’ படம் விரைவில் மறுவெளியீடு காண உள்ளது. இதற்காகப் படத்தின் 20 நிமிடக் காட்சிகளைக் குறைத்துள்ளனர். நவீனத் தொழில்நுட்பத்துடன் படம் வரவிருக்கிறது.
இந்நிலையில், அவர் அடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குகிறார் என்ற தகவல் வெளியானது, திரையுலகிலும் அரசியல் தளத்திலும் பலரை வியக்க வைத்துள்ளது.
பாமகவில் தலைமைத்துவம் தொடர்பாக தந்தை, மகனுக்கு இடையே நடந்து வரும் மோதல் அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழலில் தனது வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுவதை மருத்துவர் ராமதாஸ் விரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், இதுபோன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்துள்ளது. ராமதாஸ் வாழ்க்கைப் படத்தை சேரன்தான் இயக்க வேண்டும் என்று விரும்பிய தயாரிப்பாளர், நேரடியாக சேரனிடமே பேசியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பாகவே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்ட சேரனும் திரைக்கதை, காட்சிகளுக்கான விவாதப் பணியைத் தொடங்கிவிட்டாராம்.
தொடர்புடைய செய்திகள்
“மருத்துவர் ராமதாஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அது முற்றுபெறும் சமயத்தில்தான் மலையாளத்தில் ‘நரிவேட்டை’ என்ற படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு சேரனுக்கு அமைந்தது.
“நல்ல சினிமாவை யாரும் ஒதுக்கிட முடியாது. அர்த்தமுள்ள சினிமாவுக்கான விருப்பம் எனக்கு எப்போதுமே இருந்திருக்கிறது,” என்று ஓர் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் சேரன்.
‘நரிவேட்டை’ நடித்து முடித்த பிறகு மீண்டும் ராமதாஸ் படத்துக்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு முழுமையாக முடித்துவிட்டாராம்.
“ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25ஆம் தேதி இப்படம் குறித்த தகவல்களை வெளியிடத் திட்டமிடுகிறார்கள். மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுமாம். முதல் பாகத்தில் ராமதாஸ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, மருத்துவம், ஏழை மக்களுக்குச் சேவை செய்யும் விதத்தில், சொந்தமாக ‘கிளினிக்’ ஒன்றைத் தொடங்கி, 2 ரூபாய், 3 ரூபாய் என மிகக்குறைந்த கட்டணத்தில் சேவை செய்தது ஆகியவை பதிவு செய்யப்படுமாம்.
“பின்னர், தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியதுடன், அவர்களின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என முடிவு எடுத்தது, கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் நின்றது முதல் வெற்றி பெற்றது வரை இரண்டாம் பாகத்தில் இடம்பெறும். இறுதி பாகத்தில் மற்ற சுவாரசியங்கள் இடம்பெறும்,” என்றும் விகடன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ராமதாஸ் பாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனராம். மற்றவர்களுக்கான தேர்வுகள் நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள். படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.