மீண்டும் ‘பறந்து போ’ என்ற தரமான படைப்புடன் களமிறங்கி உள்ளார் இயக்குநர் ராம்.
குழந்தைகளுக்கு தங்களால் இயன்றவற்றைச் செய்யும் அனைத்துப் பெற்றோர்களும் நல்லவர்கள்தான். இப்படமும் அதைத்தான் சொல்கிறது என்று படத்தின் கதைக்கருவை மிகச் சுருக்கமாக விவரித்துள்ளார்.
‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ ஆகிய படங்களை இயக்கிய ராமின் அடுத்த படைப்பான ‘பறந்து போ’ படம் பிப்ரவரி மாதம் ரோட்டர்டாம் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜூன் 26ஆம் தேதி இந்தியாவில் முதல்முறையாக கோவையில் உள்ள தனியார் திரையரங்கில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது.
சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மிதுன் ரயான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் இது. ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது.
கோவையில் படம் பார்த்த ரசிகர்களுடன் கலந்துரையாடிய ராம், இப்படியோர் சிறப்புக் காட்சியைத் திரையிட வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்றார்.
இயக்குநராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என்று குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்காக சிறுசிறு தியாகங்கள் செய்யும் பெற்றோர்களுக்காக இந்தப் படத்தை உருவாக்கியதாகக் கூறினார்.
“உலகில் உள்ள அனைத்து பார்வையாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சிதான் இந்த படம்.
“இது நல்ல உணர்வைத் தரக்கூடிய நகைச்சுவைப் படம். எனது ரசிகர்களுக்கும் அனைத்து பார்வையாளர்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். பெற்றோரின் தியாகங்களுக்கான ஒரு படம். மலை உச்சிக்கு செல்வது, கடலைப் பார்ப்பது எல்லாம் எனக்குப் பிடித்த உணர்வு. அதைப் படத்திலும் உணர முடியும்.
தொடர்புடைய செய்திகள்
“குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது அவர்களுடன் சற்று நேரம் செலவிட வேண்டும் என்பது மட்டுமே. அதைத்தான் இந்தப் படம் சொல்கிறது,” என்றார் ராம்.
இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மித்துனுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நம்புவதாகக் ககுறிப்பிட்ட அவர், கதை நாயகனான ‘மிர்ச்சி’ சிவா மிகச்சிறந்த நடிகர் என்றார்.
“சிவாவின் நகைச்சுவை குழந்தைத்தனமான ஒன்றாகவும் சிறப்பாகவும் இருக்கும். இப்படத்தில் அவரது கதாபாத்திரமும் ஒரு நகைச்சுவையான குழந்தை போன்ற அப்பாவாகத்தான் இருக்கும்.
“இன்றைய உண்மை யதார்த்தங்களை எடுத்துக் கூறக்கூடிய ஒரு படமாக இருக்கும். இப்படத்தை திரையிட்டபோது எட்டு வயது குழந்தையும் சிரிப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்,” என்றார் ராம்.