கனவுகள் நனவாகும் அதிசயங்கள் நடக்கும்: சிபி சக்கரவர்த்தி

1 mins read
fa288d5a-2ae7-4054-9151-e4107b851b56
ரஜினியுடன் சிபி சக்கரவர்த்தி. - படம்: x.com
multi-img1 of 2

நடிகர் ரஜினியின் 173வது படத்தை இயக்கப்போவது சிபி சக்கரவர்த்தி என்று தயாரிப்பு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கூலி’ படத்துக்கு முன்பே சிபி சக்கரவர்த்தி ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அச்சமயம் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

எனினும், பொறுமையாகக் காத்திருந்த தமக்கு, இப்போது புத்தாண்டுப் பரிசாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்துள்ளதாகக் கூறுகிறார் சிபி சக்கரவர்த்தி.

இதையடுத்து சமூக ஊடகத்தில் அவர் போட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், தான் சிறு நகரப் பகுதியிலிருந்து வந்ததாகவும் சிறு வயதில் தனது அபிமான நாயகனான ரஜினியைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொள்வதுதான் தமது கனவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தக் கனவுதான் என்னுடைய சினிமா ஆர்வத்தை முன்னோக்கி அழைத்துச் சென்றது. அந்தப் பெரும் கனவு ஒரு நாள் நிகழ்ந்தது. அதன்பிறகு அதே நடிகரை வைத்து படம் இயக்குவது, அந்தச் சிறு நகரத்திலிருந்து வந்தவனின் கனவாக இருந்தது,” என்று கூறியுள்ளார் சிபி சக்கரவர்த்தி.

ஆனால், அந்த அரிய வாய்ப்புக்கு அருகே சென்ற பிறகு அது கைநழுவிவிட்டதாகவும் பின்னர் ஏதேனும் ஒரு நாள் அந்தக் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்ததாகவும் சிபி தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“கனவுகள் நனவாகும், அதிசயங்கள் நடக்கும் எனத் தலைவர் சொன்னவற்றையே இப்போது நினைவுகூற விரும்புகிறேன். சில சமயங்களில் வாழ்க்கை, கனவுகளைத் தாண்டி இன்னும் பெரியதாக ஆகிவிடும்,” எனப் பதிவிட்டுள்ளார் சிபி சக்கரவர்த்தி.

குறிப்புச் சொற்கள்