‘திரிஷ்யம் 3’ இறுதி காட்சி மிகப்பெரிய அதிர்ச்சியைத் தரும்: நடிகை ஆஷா சரத் உற்சாகத் தகவல்

‘திரிஷ்யம் 3’ இறுதி காட்சி மிகப்பெரிய அதிர்ச்சியைத் தரும்: நடிகை ஆஷா சரத் உற்சாகத் தகவல்

படம்: தினமலர்

09 Feb 2026 - 4:18 pm

1 mins read

மலையாளத் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளில் மோகன்லால் - இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன.

அதனைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முதல் இரண்டு பாகங்களின் இறுதிக் காட்சிகள் ரசிகர்கள் யூகிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மூன்றாம் பாகத்துடன் கதை முழுமையாக நிறைவடைகிறது என இயக்குநர் ஜீத்து ஜோசப் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனால் இப்படத்தின் கதைக்களம் குறித்தும் இறுதித் திருப்பங்கள் குறித்தும் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டு பாகங்களிலும் காவல் துறை அதிகாரியாகத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆஷா சரத், மூன்றாம் பாகத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அண்மைய நேர்காணல் ஒன்றில் படம் குறித்துப் பேசிய அவர், முதல் இரண்டு பாகங்களைப் போலவே இந்த மூன்றாம் பாகத்தின் இறுதிக் காட்சியும் யாரும் எதிர்பாராத விதமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் இன்னும் பல மடங்கு அதிர்ச்சி அடையத் தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை