சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படமும் சூரியின் மாமன் திரைப்படமும் மே 16ஆம் தேதி போட்டிபோட்டு வெளியான நிலையில் வசூலில் மாமனை முந்தியது ‘டிடி நெக்ஸ்ட்’.
நகைச்சுவை நடிகர்கள் நாயகனாக நடிப்பது நாகேஷ், வடிவேலு தொடங்கி பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. நாகேஷ், வடிவேலு ஆகியோர் நாயகனாக நடித்தாலும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை கைவிடவில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகனாக அறிமுகமான சந்தானம், சூரி ஆகியோர் நாயகர்களாக நடிக்கத் தொடங்கிய பின்னர் நகைச்சுவை வேடங்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. தற்போது அவர்கள் நாயகனாக நடித்த ‘மாமன்’ மற்றும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஆகிய திரைப்படங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.
சந்தானம் நாயகனாக பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால், அவரைக் காட்டிலும் சூரி, நாயகனாக நடித்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இவர்கள் இருவரும் நாயகனாக நடித்த படங்கள் முதன்முறையாக ஒரே நாளில் வெளியாயின.
இதில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். அப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார்.
சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இரண்டு படங்களின் வசூல் நிலவரமும் வெளியாகி உள்ளது. சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளை விட 30 விழுக்காடு கூடுதலாக வசூலித்து உள்ளது. முதல் நாளில் ரூ.1.53 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் ரூ.2.04 கோடி வசூலித்துள்ளது. இருப்பினும் சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை நெருங்க முடியவில்லை. ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.2.54 கோடியும் இரண்டாம் நாளில் ரூ.2.59 கோடியும் வசூலித்து முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.