துல்கர் சல்மான் போல் ஒரு நல்ல நண்பரைப் பார்க்கவே முடியாது என்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய துல்கருக்கு வாழ்த்து தெரிவித்து இவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு, மலையாள ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.
துல்கர் சல்மானின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் தனது வாழ்த்தை நீளமாகப் பதிவிடுவது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.
திரையுலகிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனக்கு துல்கர்தான் எப்போதுமே பக்கபலமாக இருந்து வருகிறார் என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தனக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் முதலில் நிற்பது அவர்தான் என்றும் கல்யாணி கூறியுள்ளார்.
“நான் தனிமையை உணர்ந்ததில்லை என்றால், அதற்கு துல்கர்தான் காரணம். அவர் இல்லையென்றால் நான் என்னவாகியிருப்பேன் எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அனைத்து தருணங்களிலும் அவர் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார்,” என்று கல்யாணியின் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார், அவற்றில் இருந்து விடுபட துல்கர் என்னென்ன உதவிகள் செய்தார் என்பது குறித்து அப்பதிவில் விவரங்கள் ஏதுமில்லை. ஆனால், ரசிகர்கள் இது குறித்துதான் அதிகமாக கேள்வி எழுப்புகிறார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணியும் துல்கர் சல்மானும் ‘வரணே அவசியமுண்டு’ என்ற மலையாளப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது முதல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.
துல்கர் சல்மானின் தந்தை மம்முட்டி மருத்துவமனையில் உள்ளார். எனவே, இந்த ஆண்டு தனது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடி உள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் பிரியதர்ஷன், நடிகை லிஸ்ஸி ஆகியோரின் மகள்தான் கல்யாணி.