இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய உளவாளியைப் பற்றிய கதைக்களத்தில் இப்படம் அமைந்திருந்தது.
இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படம் இம்மாதம் மார்ச் 19ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. முதல் படத்தைப் போல இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
துரந்தர் 2 திரைப்படம் வெளியான ஏழு நாள்களிலேயே உலக அளவில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த உளவாளி படம் வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது.
சீன திரைப்படமான ‘பெகாசஸ் 3’ (Pegasus 3) இந்த ஆண்டு உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ‘பெகாசஸ் 3’ ரூ. 5,900 கோடிக்கும் அதிகமான வசூலைத் தாண்டியுள்ளது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இதற்கிடையே, படத்தில் சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றதாக இணையத்தில் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.
“படத்தின் கதாநாயகன் சீக்கிய தலைப்பாகையை அணிந்து புகைபிடிப்பது போன்ற காட்சிகள் முற்றிலும் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பொய்யான புகைப்படம் ஆகும். சீக்கிய சமூகத்தின் மீது நாங்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ரன்வீருக்கு நெருக்கடி
இந்நிலையில், கடந்த ஆண்டு கோவாவில் நடந்த அனைத்துலகத் திரைப்பட விழாவில், ரன்வீர் சிங் பேசுகையில், ‘காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டியை பாராட்டினார்.மேலும் காந்தாரா படத்தில் இடம்பெறும் சாமுண்டி தெய்வத்தை போன்று நடித்தும் காட்டினார்.
இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் ரன்வீர் சிங் தனது சமூக ஊடகப்பக்கத்தில் மன்னிப்பு கோரினார்.
இருப்பினும், பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.ஜி.மலையாளி, நடிகர் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வியாழக்கிழமை (மார்ச் 27) நடந்த வழக்கு விசாரணையின்போது “கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த ரன்வீருக்கு எந்த உரிமையும் இல்லை. சாமுண்டி மலைக்கு வந்து தெய்வத்தை வணங்கி அவர் மன்னிப்பு கேட்கட்டும். அதன் பிறகு வழக்கை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்கலாம்” என்றார் சி.ஜி.மலையாளி.
இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

