விளையாட்டுத் துறைக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்துச் செயலாற்றும் தமிழக முதல்வர் விஜய்க்குத் தமது மனமார்ந்த வாழ்த்துகளை நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் மோட்டார் பந்தய விளையாட்டு நகரம் தொடர்பான புதிய அறிவிப்பினைத் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டார்.
தமிழகத்தில் பன்னாட்டுத் தரத்திலான கார் பந்தயக் களங்கள், நவீன உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக உருவாக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.
இதன்மூலம் ஃபார்முலா 1 முதல் ஃபார்முலா 4 வரையிலான அனைத்துலகப் போட்டிகளை நடத்துவதற்கான உரிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
விளையாட்டுச் சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தி, வேலைவாய்ப்பு, பொருளியல் ஆகியவை இதனால் பெரும் வளர்ச்சி பெறும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மாநில இளைஞர்களிடையே மோட்டார் விளையாட்டு மீதான ஆர்வத்தை ஊக்குவித்துப் பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகர் அஜித்குமார் கூறுகையில், “மோட்டார் பந்தயம் உட்பட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான கவனமளித்த முதல்வருக்கு நன்றி,” என்றார்.
விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி, “தமிழக அரசின் சிறிய அடி, இந்தியாவின் பந்தயத் துறைக்கு மாபெரும் பாய்ச்சல்,” என்றார்.
“முதல்வர் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் மாபெரும் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றும் அஜித்குமார் கூறினார்.


