நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘லூசிஃபர்’. 2019ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதில் மோகன்லால், மஞ்சு வாரியர் டொவினோ தாமஸ், விவேக் ஓபராய், ஜான் விஜய் உள்ளிட்டப் பலர் நடித்தனர்.
இந்நிலையில், ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எல் 2: எம்புரான்’ வரும் வியாழக்கிழமை (மார்ச் 27) மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையே படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சத்யம் திரையரங்கில் திங்கட்கிழமை (மார்ச் 24) நடந்தது. அதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது திரு மோகன்லால், “இந்தப் படத்தின் கதையை மூன்று படமாக எடுக்க முடிவு செய்தோம். ‘லூசிஃபர்’ வெற்றிக்குப் பிறகு ‘எம்புரான்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். அடுத்து ஒரு படம் வரும். இப்படியும் ஒரு பிரம்மாண்ட படம் தேவை என்று உருவாக்கி இருக்கிறோம்,” என்றார் அவர்.
“ஒரு பொழுதுபோக்கு படம் எடுப்பது மிகவும் சிரமமானது. நல்ல நடிப்பு, நல்ல இசை, ஒளிப்பதிவு என்று அனைத்தும் நன்றாக இருந்தால்தான் பொழுதுபோக்கு படம் சரியாக வரும். அதற்காக நானும் பிருத்விராஜும் இணைந்து அதிகமாக உழைத்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“மக்கள் இந்த படத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். அதற்குக் காரணம் ‘லூசிஃபர்’ கொடுத்த வெற்றி. இரண்டாம் பாகமும் வெற்றிபெற வேண்டும். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்” என்றார் மோகன்லால்.
“தமிழில் ‘டப்பிங்’ படமாக இல்லாமல் ‘ஒரிஜினல்’ தமிழ்ப் படமாக ‘எம்புரான்’ இருக்கும். தமிழ் ரசிகனாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக இப்படத்தைத் தமிழில் பார்க்கலாம். மலையாள திரைத்துறையின் மிகப்பெரிய கனவாக உத்வேகமாக ‘எம்புரான்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற்றால் மலையாளத்தில் மேலும் பல படங்கள் உருவாக்கப்படும்,” என்று பிருத்விராஜ் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் டொவினோ தாமசும் பேசினார். “இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என எப்போதுமே ஆசைப்பட்டுள்ளேன். எனது நடிப்புப் பயணத்தில் மிகப் பெரிய தாக்கத்தைக் கொடுத்தது இப்படம்தான்,” என்று அவர் சொன்னார்.
முன்பதிவில் மட்டும் ரூ. 60 கோடி
‘எம்புரான்’ திரைப்படத்திற்கான இணைய முன்பதிவில் இதுவரை 650,000 நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியுள்ளன. படம் வெளியாகுவதற்கு முன்பே உலக அளவில் ரூ. 60 கோடி வரை எம்புரான் வசூலித்துவிட்டதாகத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வணிக ரீதியாகப் பல சாதனைகளை நிகழ்த்தலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு விடுமுறை
திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மாணவர்கள் கண்டுகளிப்பதற்காகப் பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்று அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அக்கல்லூரியின் முதல்வர், நடிகர் மோகன்லால் மீது மிகுந்த அபிமானம் கொண்டவராம். அதனால் நிர்வாகம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘லைட்ஸ், கேமரா, ஹாலி-டே!’ என்று அறிவித்து மாணவர்களுக்கு மார்ச் 27ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல, பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள ஒரு திரையரங்கில் மார்ச் 27ஆம் தேதி காலை 7 மணி காட்சியை மாணவர்களுக்காக முன்பதிவு செய்தும் கொடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம்.