இனி இணைய சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களில் நடிக்கப் போவதில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஏராளமானோர் சூதாட்டச் செயலிகளை நம்பி, பேரளவில் பணத்தை இழந்து தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இத்தகைய செயலிகளுக்கு நேரடியாக, மறைமுகமாக ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்களை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு மத்திய அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், சூதாட்டச் செயலி விளம்பரத்தில் நடித்ததற்குத் தமக்கு சல்லிக்காசுகூட கிடைக்கவில்லை என்றார்.
“இனி பணம் கொடுத்தாலும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நான் கூறிய தகவல்களைப் பதிவு செய்த அதிகாரிகள், மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் எனக் குறிப்பிடவில்லை,” என்றார் பிரகாஷ் ராஜ்.