நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கும் திரையுலகில் போட்டி இருந்தது அனைவரும் அறிந்ததே. அவ்விருவரின் ரசிகர்கள் அந்தப் போட்டியை பல மடங்கு உயர்த்திப் பிடித்து ரகளையை ஏற்படுத்தினர். கத்திச் சண்டை போடுவதுதான் நடிப்பா என மக்கள் திலகம் எம் ஜி ஆரை சிவாஜி ரசிகர்கள் கிண்டல் செய்வதும் பதிலுக்கு கத்திப் பேசுவதுதான் நடிப்பா என சிவாஜியை எம் ஜி ஆர் ரசிகர்கள் கேலி செய்வதும் அந்நாள்களில் மிகவும் பிரபலம்.
ஆனால், அவ்விருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது பலரும் அறியாத ஒன்று. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் முன் அவர் நாடக நடிகராகத்தான் இருந்தார். அந்நாள்களில் நாடக நடிகருக்கு சம்பளம் என்று பெரிதாக ஒன்றும் இராது. பல சமயங்களில் எதுவும் கிடைக்காமல் கடனுக்கு நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், எம் ஜி ஆரோ 1936ஆம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி படம் தொடங்கி, அஷோக் குமார், ராஜகுமாரி, மந்திரி குமாரி, 1951ஆம் ஆண்டு வெளிவந்த மர்மயோகி என பல வேடங்களில் நடித்து தன்னைத் திரையுலக நடிகராக ஓரளவு நிலைநிறுத்திக் கொண்டார்.
அப்பொழுதெல்லாம் சிவாஜி பல நாள்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வந்தார். அதனால் எம் ஜி ஆர் நடிப்பு முடிந்து இருவருக்குமாகச் சேர்த்து சாப்பாடு வாங்கி வந்து அவருடன் சேர்ந்து சாப்பிடுவார். இதையெல்லாம் தாண்டித்தான் சிவாஜி தனக்கு 1952ஆம் ஆண்டு வந்த பராசக்தி என்ற படம் மூலம் தமிழ்த் திரையுலகில் புயலென அறிமுகமானார். அதன் பின் நடிகர் திலகம் அவர்களின் திரையுலக வாழ்க்கை சக்கைபோடு போட ஆரம்பித்தது.
தனது நண்பன் எம் ஜி ஆர் செய்த உதவியை சிவாஜி என்றும் மறந்ததில்லை. அவருக்கு ஏதாவது ஒரு வகையில் கைமாறு செய்ய வேண்டும் என்று எண்ணிக் காத்திருந்தார். அந்த நாளும் இனிதே வந்தது. பராசக்தி படத்தில் சிவாஜிக்கு அனல் பறக்கும் வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி கைவண்ணத்தில் ஸ்ரீராமுலு நாயுடு என்பவரின் பட்சிராஜா ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மலைக்கள்ளன் என்ற படத்தில் நடிக்க சிவாஜியைத்தான் முதலில் அழைத்தனர். ஆனால், இந்தப் படத்தில் எம் ஜி ஆர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறி அவருக்கு வாய்ப்புக் கொடுக்கும்படி கூறினார் சிவாஜி. இதை எம் ஜி ஆரிடமும் கூறி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்தார்.
மலைக்கள்ளன் படம் எம் ஜி ஆருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. படம் பல திரையரங்குகளில் 140 நாள்களைத் தாண்டி ஓடியதுடன் இந்திய அதிபரின் வெள்ளி விருதை வென்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையையும் பெற்றது. எம் ஜி ஆரும் அந்தப் படத்துக்குப் பின் வெற்றிப்பட நாயகனாகப் தன்னை உயர்த்திக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் சிவாஜியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார். அதற்கு அவர் ஒரு ரூபாய் சம்பளமாகக் கொடுத்தால்கூட போதும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில்தான் தயாரிப்பாளர், இயக்குநர் டி ஆர் ராமண்ணா, இந்த இரு திலகங்களும் அன்றிலிருந்து இன்றுவரை சேர்ந்து நடித்த ஒரே படமாகத் திகழும் கூண்டுக்கிளி என்ற படத்தைத் தயாரித்தார். இதில் சிவாஜி வில்லனாக, படத்தில் தனது நண்பன் தனக்காக கொலைப் பழியை ஏற்று சிறை சென்றதையும் எண்ணாமல் அவரது மனைவிக்குத் தொல்லை தந்து அவரை அடையப் பார்ப்பார். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனினும், இந்த இரு திலகங்களும் அரசியலில் வேறு கட்சிகளில் இருந்தாலும் அவர்கள் நட்பு என்றும் மாறாது தழைத்தோங்கியது.
இருவரும் திரையுலகில் இன்றியமையாத இருபெரும் கதாநாயகர்களாக விளங்கினாலும் இருவரின் அரசியல் வாழ்க்கையும் வேறு வேறு திசையை நோக்கிச் சென்றன. எம் ஜி ஆர் தனக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த பாணியுடன் படத்தில் வில்லன் வேடம் ஏற்பதில்லை. அவர் புகைபிடிப்பது போன்றோ, குடித்துவிட்டு மாதர்க்குத் தொல்லை தருவது போன்ற காட்சிகளோ அவர் படங்களில் பார்க்க முடியாது. அதை வைத்தே தனக்கென ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அரசியலிலும் உச்சம் தொட்டார். ஆனால், சிவாஜி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வில்லானாகத் திரும்பிப்பார், பெண்ணின் பெருமை போன்ற படங்களில் தனது முத்திரையைப் பதித்தார். அதுபோல், குடிபோதையில் அவருக்காக ஒலிக்கும் தத்துவப் பாடல்கள் கேட்பவர் நெஞ்சத்தை இளக வைத்துவிடும்.

