ஒவ்வொரு திரைப்படமும் ஒரு வாழ்க்கை: பிரீத்தி முகுந்தன்

2 mins read
f3f53105-851e-4794-a6b0-e29a937d13f4
பிரீத்தி முகுந்தன். - படம்: பிரீத்தி/ஃபேஸ்புக்
multi-img1 of 2

ஒவ்வொரு திரைப்படமும் ஒரு வாழ்க்கை என்கிறார் நடிகை பிரீத்தி முகுந்தன்.

‘ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர். தற்போது ‘இதயம் முரளி’, ‘கண்ணப்பம், ‘சர்வம் மாயா’ ஆகியவை தவிர, மேலும் இரண்டு பெயரிடப்படாத படங்களில் நடிக்கிறார்.

இளையர்களின் கனவுக்கன்னியாக மாறியது, நல்ல நடிகை எனப் பெயரெடுத்தது, நடனக் கலைஞராக பிரபலமானது என அனைத்துக்கும் ‘ஸ்டார்’ பட வாய்ப்புதான் காரணம் என அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பிரீத்தி முகுந்தன்.

திரையுலகத்தில் அறிமுகமாகும் முன்பு, தான் உண்டு தன் மாடலிங் உண்டு என்றுதான் இருந்தாராம். இப்போது அனைத்தும் மாறிவிட்டதாகச் சொல்கிறார்.

“திரையுலகின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறு எந்தத் துறைக்கும் இல்லாத சிறப்பம்சம் இதுதான்.

“பல்வேறு மொழிகளில் நடிக்கும்போது அந்தந்த கலாசாரங்களைச் சேர்ந்த மக்கள் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். இதை பெரிய ஆசிர்வாதமாகக் கருதுகிறேன்,” என்கிறார் பிரீத்தி.

‘கண்ணப்பா’ படத்தில் நடிப்பது, நடனம் போக, சண்டைக் காட்சியிலும் அசத்தியுள்ளார் இவர்.

திரையுலகில் நடிப்பு, நடனம், இசையைப் போல் சண்டையும்கூட ஒரு தனித்துவமான கலை என்பதுதான் பிரீத்தியின் கருத்து.

“நான் சிறு வயதிலிருந்தே நடனமாடுகிறேன். அதுதான் சண்டைக்காட்சிகளில் நடிக்கும் அளவுக்கு உடல் தகுதியைக் கொடுத்தது.

“ஒரு நல்ல நடனக்கலைஞர், நல்ல நடிகை ஆகியவற்றுடன் நல்ல சண்டைக் கலைஞராகவும் என்னால் மிளிர முடியும் என்ற நம்பிக்கை மனத்தில் நன்கு வேரூன்றி உள்ளது,” என்று சொல்லும் பிரீத்திக்குப் பிடித்த நடிகர் விஜய்.

விஜய் நடனத்துக்கு தாம் தீவிர ரசிகை என்கிறார். விஜய் போன்ற நடனத்திறமை கொண்ட கதாநாயகர்கள் மிகவும் அபூர்வம் என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

பிரீத்தியின் சொந்த ஊர் திருச்சி. சிவகார்த்திகேயன், கவின், இயக்குநர் பிரபு சாலமன், நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என திருச்சியில் இருந்து வந்து திரையுலகில் சாதித்தவர்களில் யாரையுமே இவருக்குத் தெரியாதாம்.

ஆனால், தானும்கூட ஏதாவது சாதிக்க முடியும் என உறுதியாக நம்புகிறார்.

“நான்கு வயதில் இருந்து நடனப்பயிற்சி மேற்கொள்கிறேன். ஓவியம் தீட்டுவது, நீச்சல் பயிற்சி என்று அனைத்திலும் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால், நடனம்தான் என் திரை வாழ்க்கையைத் தீர்மானிக்கப்போகிறது என நினைக்கவே இல்லை.

“நடனமாடும்போது நான் பளிச்சென்று தெரிவதாகப் பலரும் கூறுகிறார்கள். படிப்பைவிட, தேர்வுகளைவிட எப்போதும் நடனத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.

“நான் நம்பிக்கையுடன் கற்றுக்கொண்ட கலை இது. அதனால்தான் நடனமாடும்போது பளிச்சென்று தெரிகிறேன் எனத் தோன்றுகிறது.

“இரண்டு நாயகிகள் உள்ள படங்களில் நடிப்பது குறித்து பலரும் கேட்கிறார்கள். முன்னணி கதாநாயகர்கள் திடீரென வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில்லையா, அதுபோன்றது இதுவும்.

“ரஜினி, கமல், மம்மூட்டி, விஜய் சேதுபதி என்று வில்லன் வேடத்தில் நடித்துள்ள நடிகர்களின் பட்டியல் பெரிதாக உள்ளது. எனவே, இரு நாயகிகள் கொண்ட கதைகளில் நடிப்பதை தகுதி குறைவாகக் கருதமாட்டேன்,” என்று குமுதம் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார் பிரீத்தி முகுந்தன்.

குறிப்புச் சொற்கள்