“திரைத்துறையில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் திறமையாக நடிக்கக்கூடிய நடிகை என்று பெயரெடுத்தால் போதும் என்றுதான் நினைத்தேன். இப்போது அப்படிப்பட்ட நடிகையாக இருப்பதில் மனநிறைவு கொள்கிறேன்,” என்கிறார் நித்யா மேனன்.
விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்த ‘தலைவன் தலைவி’ படத்தில் பேரரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்தும் தனது கதாபாத்திரம் பற்றியும் கேட்டால், மணிக்கணக்கில் பேசுவார் போலிருக்கிறது.
“இயக்குநர் பாண்டிராஜ் கதை குறித்து விவரித்தபோது, நம்மால் நடிக்க இயலுமா என்ற சந்தேகம் எழுந்தது.
“எல்லார் வீட்டிலும் பார்க்கக்கூடிய ஒரு சராசரி பெண்தான் பேரரசி. ‘இந்த கதாபாத்திரத்துடன் உங்களால் எளிதில் ஒத்துப்போக முடியும்’ என இயக்குநர் நம்பிக்கையுடன் கூறியதை நானும் துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டேன்.
“கதையைக் கேட்டதும் ஒருவித சக்தி என் உடலில் பரவியதாகத் தோன்றியது. முன்பெல்லாம் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால், மனதுக்குள் சில விஷயங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
“ஆனால், இந்த முறை அவ்வாறு யோசிக்காமல் இயக்குநர் பாண்டிராஜ் என்ன சொல்கிறாரோ, அதை மட்டும் செய்வது எனத் தீர்மானித்தேன். அவர் சொன்னதைத்தான் என் உடல் மொழியுடன் சேர்த்து திருப்பிச் செய்தேன்.
“இந்தப் படத்தில் வருவது போன்ற கிராமத்துச் சூழலில் நான் வாழ்ந்ததில்லை. படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பைப் பார்த்தபோது மிகுந்த மனநிறைவு ஏற்பட்டது. பேரரசிக்கு எல்லார் மனத்திலும் நிச்சயம் இடம் கிடைக்கும். எனக்கும் நல்ல பெயரை பெற்றுத் தருவாள் என உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் நித்யா மேனன்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற உடனேயே உற்சாகமாகிவிட்டாராம். அவருடன் ஏற்கெனவே ஒரு மலையாளப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பின்போது சேதுபதியும் பாண்டிராஜும் இயல்பாகப் பேசி நடந்துகொண்டதால், தம்மால் அவர்களை எளிதில் அணுக முடிந்ததாகச் சொல்கிறார்.
“பாண்டிராஜ் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களைச் சொல்வார். அவை ஒவ்வொன்றும் நமக்குப் பல பாடங்களைக் கற்பிப்பது போன்று இருக்கும்.
“அவர் வளர்ந்து வந்த கதைகளே அவ்வளவு அருமையாக இருக்கும். அனைத்திலும் ஒருவித நகைச்சுவை இழையோடும் என்பதுதான் சிறப்பம்சம். அவருடன் பேசும்போதெல்லாம் சிரித்தபடியே இருப்பேன்,” எனப் படப்பிடிப்பின் அனுபவத்தைப் பகிர்கிறார் நித்யா மேனன்.
மதுரையில் நடந்த படப்பிடிப்பின்போது, கிடைத்த இடைவேளைகளில் நிறைய கோவில்களுக்குச் சென்றாராம்.
மதுரை மக்களை மிகவும் பிடித்துவிட்டதாகவும் அவர்களின் எளிமை மிக அழகானது என்றும் ரசனையுடன் குறிப்பிடுகிறார்.
“மதுரையில் பரோட்டா போடுவது பற்றியெல்லாம் கற்றுக்கொண்டேன். சுவைக்காக நிறைய பரோட்டாக்கள் சாப்பிட்டேன்,” என்று அண்மைய பேட்டியில் நித்யா குறிப்பிட்டிருப்பது அவரது ரசனையின் உச்சம்.
எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது நித்யாவின் முக்கியமான விருப்பங்களில் ஒன்று. சில முறை அதற்கு முயற்சி செய்தும், எதுவும் சரியாக அமையவில்லையாம்.
“அப்படியோர் கதாபாத்திரம் அமைய வேண்டும் என்கிற ஆசை இன்னமும் மனத்தில் உள்ளது. போகிற போக்கைப் பார்த்தால், நானே அப்படியோர் கதாபாத்திரத்தை எழுதி நடித்தால்தான் சரியாக வரும் போலிருக்கிறது.
“தேசிய விருது வாங்கிய நடிகை என என்னைப் புகழ்கிறார்கள். ஆனால், தேசிய விருது வாங்குவதற்கு முன், பின் என எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை.
“திரையுலகில் நடிக்கத் தொடங்கியது முதல் என் படம் தொடர்பான முடிவுகளை நானே எடுத்து வருகிறேன்,” எனக் கூறுகிறார் நித்யா மேனன்.