அதிரடி நாயகி என எல்லாரும் பாராட்டினார்கள்: தேவிகா

அதிரடி நாயகி என எல்லாரும் பாராட்டினார்கள்: தேவிகா

2 mins read
28d0f436-bd63-4592-a2bf-947e67a3d12a
தேவிகா சதீஷ். - படம்: தேவிகா, எக்ஸ் தளம்

‘ஆழி’ படத்தில் அழகுச்சிரிப்பு, உதட்டுச்சுழிப்பு என ரசிகர்களை ஒரேடியாகக் கவிழ்த்துவிட்டார் நடிகை தேவிகா சதீஷ்.

‘ஆழி’ படத்தில் சரத்குமாரின் மகளாக நடித்துள்ளார். இன்றைய நவீன உலகத்தைச் சேர்ந்த பதின்ம வயதுப் பெண் வேடத்தில் கனகச்சிதமாக நடித்துள்ளதாகப் பலரும் பாராட்டியுள்ளனராம்.

இனி தேவிகா கூறியதைக் கேட்போம்.

“ஒரு வகையில் இந்தக் கதாபாத்திரம் கொஞ்சம் கெட்ட குணங்கள் கொண்டதுதான். குறிப்பிட்ட ஒரு காட்சியில் ஓடிவந்து ‘டைவ்’ அடிக்க வேண்டும் என்றார் இயக்குநர். ‘டூப்’ போடாமல் நானே அந்தக் காட்சியில் நடித்தேன். அதைப் பார்த்ததும் சரத்குமாரே அசந்துபோனார். “நீ பெரிய அதிரடி கதாநாயகியாகப் பிரகாசிக்க முடியும்,” என வாழ்த்தினார். பிறகு படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவரும் பாராட்டினர்.

“நடிப்பு சம்பந்தமாக அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் முத்திரை பதிக்கிறார். ஹாலிவுட் கலைஞரைப்போல் அவர் வெளிப்படுத்தும் ஒவ்வோர் உணர்வும் நம்மை மலைக்க வைக்கிறது. திரு சரத்குமார் மிகப்பெரிய நடிகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

“நான் சண்டைப் பயிற்சியெல்லாம் பெற்றதில்லை. எல்லா நுணுக்கங்களும் நானாகக் கற்றுக்கொண்டதே. ‘யூடியூப்’ காணொளியைப் பார்த்தபோது அவற்றில் பல மிகவும் சுவாரசியமாக இருந்தன. அதனால் ஆர்வத்துடன் தற்காப்புக்கலை கற்கத் தொடங்கினேன்.

“ஒருமுறை குத்துச்சண்டையில் ஒரு பையனுடன் மோத வேண்டியிருந்தது. அந்தப் பையன் கண்டபடி தாக்கியதில் கொஞ்சம் பலமாக அடிபட்டு ஒருமாதம் படுக்கையில் கிடந்தேன். அதன் பிறகு ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என்றனர். ஆனால், ஒரே வாரத்தில் நான் வாங்கிய புது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பிச் சென்றுவிட்டேன்.

“எனக்கு ‘புல்லட்’ என்றால் மிகவும் பிடிக்கும். ஊட்டி, மூணாறு போன்ற மலைப்பிரதேசங்களுக்குத் தனியாகவே ஓட்டிச்செல்வேன். சில நேரங்களில் பெண்கள் மட்டுமே கொண்ட குழுவாகவும் கிளம்பிச்செல்வோம்.

“எனக்குப் பிடித்த நடிகர் என்றால் அது கார்த்திதான். ‘பையா’ போன்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆசை. நக்கல் கலந்து கேலியும் கிண்டலுமாக அவர் வெளிப்படுத்தும் உடல்மொழியும் வசனங்களும் மிகவும் பிடிக்கும். அதேநேரம் ரஜினி, கமல், தனுஷ், சூர்யா ஆகியோரும் எனக்குப் பிடித்தமான நடிகர்கள்தான்.

“புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உண்டு. உடனே பெரிய ஒளிப்பதிவாளர் என்று நினைத்துவிட வேண்டாம். ஓரளவு நன்றாகப் படம்பிடிப்பேன்.

“ஆழி படத்தில் என்னுடன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுக்க நிலப் பகுதியில்தான் படமாக்கினர். ஒரு காட்சி மட்டுமே நடுக்கடலில் படமாக்கப்பட்டது. அது மறக்கமுடியாத, திகிலான, அதிரடியான அனுபவம்.

“இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நாய் ஒன்றை நடிக்க வைத்தனர். படப்பிடிப்பின்போது என்னைப் பார்த்தாலே அது முறைக்கத் தொடங்கிவிடும். பலமுறை பயந்து, ஒதுங்கி, ஓடியிருக்கிறேன். பிறகு பிஸ்கட் எல்லாம் வாங்கிக்கொடுத்து அதனுடன் நட்பானேன்.

“இந்தப் படத்தில் முத்தக்காட்சியிலும் நடித்துள்ளேன். முதல் ‘டேக்’கிலேயே காட்சி படமாகிவிட்டது. உடனே, ‘முன் அனுபவம் உள்ளதா’ என்று எல்லாரும் கேலி செய்தனர். உண்மையில் அப்படியெல்லாம் ஏதுமில்லை. என் நேரம் முதல் முயற்சியிலேயே காட்சி படமாக்கப்பட்டது,” என்று அண்மைய பேட்டியில் மனம் திறந்துள்ளார் தேவிகா.

குறிப்புச் சொற்கள்