திரையரங்கில் சுவாரசியம்: பெண்களுக்கென சிறப்பு ‘முதல் நாள் முதல் காட்சி’

2 mins read
மகளிர் மட்டும்
eade828b-1975-4b78-a402-a25347a12e6e
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ‘முதல் நாள் முதல் காட்சி’யைப் பார்க்க ஆர்வமுடன் மகளிர், ரசிகர்கள். திரையரங்க உரிமையாளர் கார்த்திகேயன் (நிற்பவர்களில் வலக்கோடி) உடன் உள்ளார். - படம்: விகடன்

அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

எந்தப் படமாக இருந்தாலும் ‘முதல் நாள் முதல் காட்சி’ கொண்டாட்டம் பெரும்பாலும் ஆண்களுக்கானதாகவே இருக்கும்.

ஆனால், ஈரோட்டிலும் திருப்பூரிலும் ‘ஸ்ரீ சக்தி சினிமாஸ்’ என்ற திரையரங்கம், முதன்முறையாக பெண்களுக்கென பிரத்தியேகமாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைத் திரையிட்டிருக்கிறது.

இந்த முயற்சியைப் பலரும் சமூக ஊடகங்களில் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்துரைத்த ‘ஸ்ரீ சக்தி சினிமாஸ்’ திரையரங்க மேலாளர் ஜான், “பொதுவாக பெரிய படங்களின் முதல் நாள் முதல் காட்சியை ஆண்கள்தான் கொண்டாடுவார்கள். பெண்களுக்கென இடவசதியை ஒதுக்குவதற்கு வாய்ப்பு குறைவு.

“இருந்தாலும், இம்முறை பெண்களுக்காக மட்டும் முதல் நாள் முதல் காட்சியைத் திரையிட விரும்பினோம். இப்போதைக்கு ஈரோடு, திருப்பூரில் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளோம்,” என்றார்.

இதுபற்றி மேல்விவரம் வழங்கிய திரையரங்க உரிமையாளர் கார்த்திகேயன், “ஈரோடு, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி உட்பட மொத்தம் ஆறு ஊர்களில் திரையரங்கு நடத்துகிறோம்.

“பெரிய படங்களின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைப்பது சிரமம். இதனாலேயே பெண்கள் பெரும்பாலும் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க வாய்ப்பு இல்லாமல் போகிறது.

“ஆண்கள் கொண்டாடுவதுபோல பெண்களும் ஒரு படத்தைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களுக்காக இந்த முதல் நாள் முதல் காட்சியைத் திரையிடத் திட்டமிட்டோம். நாங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் அத்தனை டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

“இனிவரும் பல படங்களின் முதல் நாள் முதல் காட்சியைப் பெண்களுக்கு மட்டும் திரையிட இருக்கிறோம். காலையில் நான் திரையரங்கிற்கு வந்து பார்த்தபோது எல்லாரும் மிகவும் உற்சாகமாக இருந்தனர்,” என்று பகிர்ந்தார்.

இந்த ஏற்பாட்டைச் செய்து தந்ததற்காகத் திரைப்படம் பார்க்கச் சென்ற பெண்கள் தங்களிடம் மனமார்ந்த நன்றி கூறியதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்