84 நாள்கள் படப்பிடிப்பில் 84 விஜய் படங்கள் பார்த்த அனுபவம்: இயக்குநர் வினோத்

3 mins read
6ab8896d-2cdc-453c-a9a8-c3957ee9df42
‘ஐனநாயகன்’ படத்தில் விஜய் தோன்றும் காட்சி. - படம்: விகடன்
multi-img1 of 2

‘ஜனநாயகன்’ படம் மூலமாக அரசியல் அவதாரம் எடுக்கும் நடிகர் விஜய்யின் இறுதிப் படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருந்தவர் விகடனுக்கு அளித்த பேட்டியில் விஜய் பற்றியும் அவரின் பன்முகத்தன்மை பற்றியும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

விஜய்யை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

‘‘விஜய்யை இயக்கியது மகிழ்ச்சியான அனுபவம். இது அவரின் இறுதிப் படம் என்ற அழுத்தமெல்லாம் எங்களுக்கு இல்லை. படத்தில் அவர் ஒரு காவல்துறை அதிகாரி. 100 நாள் படப்பிடிப்பில், அவரை மட்டும் 84 நாட்கள் படமாக்கினோம். அது எனக்கு 84 விஜய் படங்கள் பார்த்தது போல இருந்தது. அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவருக்கு இயக்கம், லைட்டிங் எனத் தொழில்நுட்ப விஷயங்களும் அத்துப்படி. கேமரா முன் அவர் நிற்கும் ஒவ்வொரு கணமும் ஒரு மேஜிக்தான்”.

இந்தப் பட வாய்ப்பு எப்படி அமைந்தது?

‘‘தயாரிப்பாளர்கள் சுதன், சந்தோஷ் மூலமாகத்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. ‘விஜய் கதை கேட்கிறார்’ என்றதும் சந்தித்தேன். கதை அவருக்குப் பிடித்திருந்தது. விஜய், பாபி தியோல், மமிதா பைஜு ஆகிய மூவரைச் சுற்றித்தான் கதை நகரும். படத்தின் தலைப்புக்கான காரணம் படம் பார்க்கும்போது புரியும்.’’

நடிகர்கள் தேர்வு பற்றி

‘‘பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் சிறிய பாத்திரத்தில் வந்தாலும் விரும்பி நடித்தார். காட்சி எடுத்து முடித்தாலும் திருப்தி வரும் வரை மீண்டும் நடிப்பார். மமிதா பைஜு சண்டைக் காட்சிகளிலும் குரல் பதிப்பிலும் காட்டிய ஈடுபாடு என்னை மிரள வைத்தது. வில்லனாக வரும் பாபி தியோல், ஒரு பயங்கரமான சண்டை நாயகன் என்றே சொல்லலாம். அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.’’

அனிருத், தொழில்நுட்பக் குழு பற்றி

‘‘அனிருத் மாதிரி ஓர் உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. ‘இது நம்ம படம்’ எனத் தூக்கிச் சுமப்பவர் அவர். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் திரைக்கதையிலும் எனக்கு உதவினார். கலை இயக்குநர் செல்வகுமார் காட்சியில் தெரியாத குறைகளைக்கூடத் தேடித் தேடிச் சரிசெய்யும் நிபுணர். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா செலவு பற்றிக் கவலைப்படவே இல்லை. படத்தில் வரும் அரசியல் வசனங்களுக்கும் முழு சுதந்திரம் கொடுத்தார்.’’

இது ‘பகவந்த் கேசரி’ படத்தின் மறுபதிப்பு என்கிறார்களே?

‘‘இதை நான் ஆமாம்னும் சொல்ல முடியாது, இல்லைனும் சொல்ல முடியாது. முன்னோட்டக்காட்சி வரும்போது உங்களுக்கே தெரியும். படம் பார்க்க வரும்போது, ‘இது மறுபதிப்பு’ என்ற எண்ணத்தோடு வராதீர்கள். ஒரு தளபதி படமாக நினைத்து வாருங்கள், விடை கிடைக்கும்.’’

விஜய்யின் அரசியல் வருகை பற்றி?

‘‘அவர் அரசியலுக்கு வருவது எனக்கு ஆச்சரியம் இல்லை. வராமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவருக்குள் அந்தத் திட்டம் நீண்ட நாள்களாகவே இருந்தது. சினிமா தோல்விகளில் இருந்து மீண்டு வந்ததைப் போலவே, அரசியலில் உள்ள கஷ்டங்களையும் தனது உழைப்பால் வெல்வார்,” என்றார் ஜனநாயகன் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத்.

‘ஜனநாயகன்’ படத்தின் முன்னோட்டக்காட்சி சனிக்கிழமை (டிசம்பர் 3) மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “திரைத்துறையில் விஜய்யின் ஆற்றலை அனைவரும் அறிவோம். சினிமா பயணத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். சினிமா அவரை மிஸ் பண்ணும். எதிர்வரும் பயணத்தில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்று பதிவிட்டிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஇயக்குநர்